ராஜினாமா செய்யத் தயார்: முதல்வர் திடீர் அறிவிப்பால் பரபரப்பு!
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இணைந்து சுயேட்சைகளின் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்தன. மஜத கட்சியின் மாநில தலைவராக இருந்த குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.
ஆனால், அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் காங்கிரஸ்-மஜத கூட்டணி கட்சியினரிடையே அதிருப்தி எற்பட்டதையடுத்து அக்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். அத்துடன், கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏக்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை சந்தித்ததால், பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், கர்நாடக அரசியலில் மீண்டும் குழப்பம் நிலவி வருகிறது. முதல்வர் எடியூரப்பா மீது அவரது கட்சியை சார்ந்த
எம்.எல்.ஏ.க்கள் திருப்தியில் இருப்பதாக தெரிகிறது. பாஜக மாநில துணைத் தலைவரும், எடியூரப்பாவின் மகனுமான விஜேந்திராவின் தலையீடு ஆட்சியில் அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், கர்நாடக பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது.
இதனிடையே. கடந்த வாரம் டெல்லி சென்ற எடியூரப்பாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிடம் எடியூரப்பா குறித்து முறையிட்டனர். இதனால், எடியூரப்பாவின் பதவிக்கு எந்த நேரமும் சிக்கல் வரலாம் என்று தெரிகிறது. அவரும் தன் பங்கிற்கு காய்களை நகர்த்தி வருகிறார்.
இந்த நிலையில், கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். அதுவரைக்கும் கர்நாடக முதலமைச்சர் பதவியை தான் தொடரப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். இது கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment