சோசலிசத்துக்கும், மம்தா பானர்ஜிக்கும் சேலத்தில் திருமணம்!
கம்யூனிசத்தையும் மேற்கு வங்கத்தையும் பிரிக்க முடியாது. அப்படி அம்மாநிலத்தில் கோலோச்சி வந்த இடதுசாரிகளை ஓரங்கட்டி விட்டு வந்த மம்தா பானர்ஜி அம்மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகிறார். மம்தா பானர்ஜியும், கம்யூனிச கொள்கைகளுமே பாஜகவுக்கு அம்மாநிலத்தில் சிம்ம சொப்பனமாக இருக்கிறது.
இந்த நிலையில், சோசலிசத்துக்கும், மம்தா பானர்ஜிக்கும் திருமணம் என்று அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளராக இருப்பவர் மோகன். இடதுசாரி கொள்கைகள் மீது தீராப்பற்று கொண்ட அவர், தனது மகன்களுக்கு ஏ.ம்.கம்யூனிசம், ஏ.எம்.லெனினிசம், ஏ.எம்.சோசலிசம் என்று பெயரிட்டுள்ளார். தனது பேரனுக்கும் மார்சிஸம் என்று பெயரிட்டுள்ளார்.
இவரது மகன்கள் ஏ.ம்.கம்யூனிசம், ஏ.எம்.லெனினிசம் ஆகியோருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது ஏ.எம்.சோசலிசத்துக்கு திருமண ஏற்பாட்டை செய்துள்ளார். இதில் வியத்தகு விஷயம் என்னவென்றால் அவர் தனது மகனுக்கு பார்த்த மணப்பெண்ணின் பெயர் மம்தா பானர்ஜி.
இவர்கள் இருவருக்கும் வருகிற 13ஆம் தேதி மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் திருமணம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அதாவது சோசலிசத்துக்கும், மம்தா பானர்ஜிக்குமான திருமணத்துக்காக அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment