தமிழ்நாடு திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக அமைச்சர் ஆலோசனை..!
தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற நிலைப்பாடு திமுகவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 1971 டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்க வகை செய்யும் முறையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டப்படி அடுத்த நூறு நாளில் பணி நியமனம் வழங்கப்படும் என்றும், இனிவரும் காலங்களில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை அரசு உறுதி செய்யும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆணையர் வரும் சனிக்கிழமை ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன், ''
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பணி என்பது பிறப்பால் அனைவரும் சமம் என்பதை சட்டப்படி உறுதி செய்வது. 1971 - ல் தந்தை பெரியார் தொடங்கி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வளர்த்த சமூக நீதிக் கோரிக்கை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் 2021-ல் முழுமை அடைய வேண்டும். தமிழகத்தில் அரசுப் பயிற்சிப் பள்ளியில் ஆகமம் கற்று,தீட்சை பெற்ற இந்து மதத்தின் கவுண்டர்,தேவர், வன்னியர்,முதலியார்,யாதவர்,தேவேந்திரர்,ஆதிதிராவிடர், அருந்ததியர், பிராமணர் உள்ளிட்ட அனைத்து சாதி மாணவர்களை கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை.
மாணவர்களாகிய நாங்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் திரு.இராஜீ, திரு.வாஞ்சி நாதன் ஆகியோர் உதவியுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீதிகளிலும், நீதிமன்றத்திலும் போராடி வந்தோம்.எதுவும் நடக்கவில்லை.ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள சமூக நீதி அரசு, கொரானா பேரிடர் காலத்திலும் அனைத்து சாதி அர்ச்சகர் நியமன அறிவிப்பு வெளியிட்டிருப்பது சமத்துவத்தின்பால் தமிழக அரசு கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது'' என இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment