மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் நர்த்தகி நடராஜன்: முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு!
கடந்த 1971ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இக்குழுவானது முதல்வரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் பரிந்துரைகள் அளிக்கப்படுகிறது. இந்த குழுவானது கடந்த 2020ஆம் ஆண்டில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவை திருத்தியமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பேராசிரியர் ஜெயரஞ்சன் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ராம.சீனுவாசன் முழுநேர உறுப்பினராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட 8 பேர் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழுவில் ஒருவராக திருநங்கை நர்த்தகி நட்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய நடன கலையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை இவருக்கு உண்டு. பரதநாட்டியத்திற்கு தமது வாழ்வை அர்ப்பணித்துள்ள இவரது திறமையைப் பாராட்டி, இந்திய அரசு 2019ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி இவரை பெருமைப்படுத்தியது. தமிழக அரசின் கலைமாமணி விருதையும் இவர் பெற்றுள்ளார்.
மாநில வளர்ச்சி கொள்கை குழுவில் அனைத்து பிரிவினருக்கும் இடமளிக்க வேண்டும் என்ற நோக்கில் மருத்துவர்கள், பொருளாதார வல்லுநர்களை ஸ்டாலின் நியமித்துள்ளார். அந்த வகையில், திருநங்கை நர்த்தகி நடராஜனை நியமனம் செய்த ஸ்டாலினுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment