தமிழகத்தில் குறைகிறது சிமெண்ட் விலை; வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 19, 2021

தமிழகத்தில் குறைகிறது சிமெண்ட் விலை; வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

தமிழகத்தில் குறைகிறது சிமெண்ட் விலை; வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!


தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில், கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ஆளும் அரசிற்கு எதிராக திரும்பியுள்ளது. உடனடியாக விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர் சங்கம் (SICMA) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை காலகட்டத்தில் அனைத்து தொழில்களையும் போல சிமெண்ட் உற்பத்தி தொழிலும் கடினமான சூழலை சந்தித்துள்ளது. சிமெண்ட் நிறுவனங்களின் உற்பத்தி திறனில் 40 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் தொழிலாளர் நலனுக்காக தான் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஊரடங்கை போல தற்போதைய ஊரடங்கிலும் எங்களுடைய ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தின் நலன்களை பாதுகாப்பதோடு அவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் சிமெண்ட் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. மொத்த கட்டுமான செலவோடு ஒப்பிடுகையில் சிமெண்ட் விலை என்பது சிறிய அளவிலானது தான் என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

தொழிற்துறை அமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்த கடினமான கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு தகுந்த மற்றும் ஏற்றுக் கொள்ளத்தக்க விலையில் சிமெண்ட் கிடைக்கச் செய்வோம் என்று உறுதியளிக்கிறோம். சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அதிக சலுகை விலையில் சிமெண்ட் கிடைக்கச் செய்வதற்காக சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுகின்றன.
வளர்ச்சி பணிகளுக்காக அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் சிமெண்ட் தொழிற்சாலைகள் முழுமையாக ஆதரவு அளிக்கும் என்று தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் உறுதி அளிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடந்தால் நடுத்தர வர்க்கத்தினரின் வீடு கட்டும் கனவு நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.


 


No comments:

Post a Comment

Post Top Ad