ஸ்டாலின் ஆட்சி அவ்வளவு தான்; திமுகவினரே மறுக்க மாட்டாங்க - பகீர் கிளப்பும் அதிமுக!
தமிழகத்தில் கடந்த மே 21ஆம் தேதிக்கு பின்னர் கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் மீண்டும் நோய்த்தொற்று அதிகரிக்க வேண்டாம் என்ற நோக்கில் ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் நிலைமை முழுவதுமாக கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா 3வது அலை எச்சரிக்கையை ஒட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’வில் ஊரடங்கு உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் என்ற பெயரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், மே இரண்டாம் தேதிக்கு பின்னர் இன்னொரு ஊரடங்கை தமிழகம் தாங்காது என்று எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு எச்சரித்த திமுக, தற்போது ஆட்சியில் அமர்ந்த வினாடி தொடங்கி ஊரடங்குகளை மட்டுமே தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறது. அதேசமயம் கொரோனா பரவல் அளவு குறைந்து வருவதாக
தமிழக அரசு சில புள்ளி விவரங்களை வெளியிடுகிறது.
கொரோனா விஷயத்தில் சுணக்கம்
ஆனால் கள நிலவரமோ பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாவதாகவும், அதன் கணக்கு வழக்குகள் ஆளும் அரசால் மறைக்கப்படுவதாகவும் கடும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அப்படி மறைக்கப்பட்டும் அரசு தரும் கணக்கின் படியே இந்தியாவிலேயே அதிக கொரோனா பரவுதலும், அதிகமான கொரோனா மரணங்களும் தமிழகத்தில் தான் என்பது வேதனையான விஷயம். போதிய தடுப்பு மருந்துகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவதில் சுணக்கம், மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதிலும் குழப்பம்.
தவிக்கும் தமிழக மக்கள்
இதனால் இன்று வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதோடு நாள் ஒன்றுக்கு கொத்துக் கொத்தாக கொரோனாவிற்கு செத்து விழும் உயிர்கள் ஏராளம் என்பது தான் கொடுமை. இவை ஒருபக்கம் என்றால் மறுபக்கம் தொடர் ஊரடங்குகளால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் வேலைவாய்ப்புகளை தொலைத்து விட்டு வீதியிலும் நடமாட முடியாமல் நான்கு சுவற்றுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இப்படியிருக்க தொடர் ஊரடங்குகளை மட்டுமே உற்பத்தி செய்யும் திமுக ஆட்சி, இதன் விளைவாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு போதிய அளவில் நிவாரணங்கள் வழங்கவில்லை என்பதோடு ஆம்புலன்சுக்கு கட்டணம்,
கொரோனா பரிசோதனைக்கு கட்டணம் என நோய்த்தொற்று காலத்திலும் மக்களிடம் பிடுங்கித் தின்னும் அரசாக திமுக அரசு செயலாற்றுவது மக்களிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது. அறிவிக்கப்படும் ஊரடங்குகளை கூட முறையாக ஒழுங்குபடுத்தாமல் ஒப்புக்கு மட்டுமே ஊரடங்கு என்னும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இப்படியாக ஒரு தீர்க்கம், ஒரு தெளிவு என்பதெல்லாம் இல்லாத அரசாக நாட்களை நகர்த்தும் திமுக ஆட்சி ஒரு திறமையற்ற அரசாட்சி என்று சொன்னால் அதை மனசாட்சியுள்ள திமுகவினரும் மறுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment