தடுப்பூசி இயக்கமா, கட்சிப் பிரச்சாரமா?
தடுப்பூசியால் கிடைக்கும் பலன் எல்லோரும் அறிந்ததுதான். நோய் வராமல் தடுக்க உதவும். பாஜகவைப் பொறுத்தவரை இன்னொரு பலனும் உண்டு. எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கவும் தேர்தலில் வெற்றி பெறவும் அது உதவும். அப்படித்தான் அவர்கள் நினைத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தடுப்பூசி இயக்கத்தைக் கட்சிக்கான மாபெரும் பிரச்சார இயக்கமாக அரசின் செலவில் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் பாஜகவின் பிரச்சாரப் புலிகள்..
ஜூன் 21ஆம் தேதி தில்லி ராம் மனோகர் ஜோஹியா மருத்துவமனையில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அரசின் அடுத்த ஐந்து மாதத் தடுப்பூசித் திட்டத்தை அங்கு கூடியிருந்த ஊடகர்களிடம் அறிவித்தார். அன்று காலையில் “உலகின் மாபெரும் இலவசத் தடுப்பூசி” இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.
உலகிலேயே வேகமான இயக்கம் என்று இதை நட்டா வர்ணித்தார். 100 கோடித் தடுப்பூசிகளை அமைதியாகப் போட்டுவிட்டு அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் சீன அரசு இதையெல்லாம் கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்திருக்கக்கூடும்.
மருத்துவமனையிலுள்ள தடுப்பூசி மையத்தைப் பார்வையிட வந்த நட்டா, அங்குக் கூடியிருந்த ஊடகர்கள், கட்சித் தொண்டர்கள் மத்தியில் முகக் கவசம் போடாமல் உற்சாகமாக உரையாற்றத் தொடங்கிவிட்டார். தடுப்பூசித் திட்டத்தைக் “குலைக்க முனையும்” எதிர்க்கட்சிகளை ஒரு பிடி பிடித்தார். தடுப்பூசியைத் தயாரித்துப் பயன்படுத்துவதோடு மட்டுமின்றிப் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நிலையில் இந்தியா இருக்கிறது என்று பெருமை பொங்கக் குறிப்பிட்டார். டிசம்பருக்குள் இந்தியா 257 கோடித் தடுப்பூசிகளைத் தயாரித்துவிடும். இந்தியர்கள் அனைவருக்கும் ஆளுக்கு இரண்டு டோஸ் போடுவதற்குத் தேவையான தடுப்பூசிகள் கைவசம் இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment