சைபர் உலகப் போர் - 2: இருள் இணையம் என்றால் என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

சைபர் உலகப் போர் - 2: இருள் இணையம் என்றால் என்ன?

சைபர் உலகப் போர் - 2: இருள் இணையம் என்றால் என்ன?


அமெரிக்காவின் கலோனியல் பைப்லைன் நிறுவனத்தின் மீது நடந்த சைபர் தாக்குதலைத் தொடர்ந்து, பணம் பறிக்கும் குற்றமாக மட்டுமே இருந்து வந்த ரான்சம்வேர் தாக்குதல்கள் முதல் முறையாக ஒரு தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகப் பார்க்கப்பட்டன. இது கிட்டத்தட்ட ஏவுகணைகளைக் கொண்டு முக்கியமான கட்டுமானங்களைத் தகர்க்கும் போர்முறைக்கு நிகரானது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு நேரடியாக செயலில் இறங்கி பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கலோனியல் பைப்லைன் தங்களுடைய கணினிகளில் திரும்ப நுழைவதற்காக டார்க்சைட் என்ற ரஷ்ய ஹேக்கர் கும்பலுக்கு 2.3 மில்லியன் டாலர்கள் கொடுத்திருந்தது. அதுவரை பிட்காயின் மூலம் இருள் இணையத்தில் பரிமாறப்பட்ட பணம் யாருக்குச் சென்றது என்பதையே அறிய முடியாத சூழல் இருந்தது. ரான்சம்வேர் வரலாற்றில் முதல் முறையாக அந்தப் பணத்தை மீண்டும் பறிமுதல் செய்திருக்கிறது அமெரிக்காவின் எப்பிஐ. இதை எப்படிச் செய்தோம் என்பதை ரகசியம் கருதி அவர்கள் கூற மறுத்துவிட்டார்கள். ஆனால் டார்க் வெப்பில் இயங்கிக்கொண்டு பிட்காயின் மூலம் பரிமாற்றம் செய்துவந்தால் யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற சைபர் கிரிமினல்களின் நம்பிக்கையை இந்த நடவடிக்கை முதல் முதலாக உடைத்திருக்கிறது. இந்த உலகில் இன்னும் பயணிப்பதற்கு முன்பாக டார்க் வெப் எனப்படும் இருள் இணையம் என்றால் என்னவென்று பார்த்துவிடுவோம்.

இணையத்தின் மூன்று வகைகள்

இணையத்தைப் பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம். நாம் அனைவரும் பயன்படுத்தும் பொது இணையம். உலகளாவிய வலைப் பின்னல். அதைத்தான் வொர்ல்ட் வைட் வெப் என்று சொல்கிறோம். இணைய முகவரிகளில் வரும் மூன்று டபிள்யூக்கள் அதைத்தான் குறிக்கின்றன. நீங்களும் நானும் ஏதாவது சொல்லைத் தேடி கூகுள் செய்தால் இந்த மாபெரும் பட்டியலில் இருந்துதான் தளங்கள் நமக்குத் தரப்படும். அமேசான், வாட்ஸாப், நெட்ப்ளிக்ஸ் எல்லாமே இதுதான். இதை

அடுத்தது டீப் வெப் எனப்படும் ஆழ் இணையம். அதாவது கடவுச் சொற்கள், விபிஎன் போன்ற பூட்டுகளால் மறைக்கப்பட்ட ஈமெயில்கள், அலுவலகச் செயலிகள், அமேசான், வாட்ஸ் ஆப் போன்ற நிறுவனங்களின் டேட்டாபேஸ்கள் போன்றவை. இவற்றை அனைவரும் அணுகிவிட முடியாது. ஆனால் சட்டபூர்வமானவை. உண்மையில் அளவில் இதுதான் மிகப்பெரிய இணையம்.


மூன்றாவது வகைதான் டார்க் வெப் எனப்படும் இருள் இணையம். நம் சாதாரண கூகுள் தேடலில் இங்கே இருக்கும் தளங்கள் வந்து விழாது. இதற்கென்று டார் என்று தனியான உலாவி இருக்கிறது. அதன் வழியாக மட்டுமே இவற்றை அணுக முடியும். தளங்களை வைத்திருப்பவர்கள் யார், அங்கே பயனாளர்களாக உலவுபவர்கள் யார் என்று எதையும் தெரிந்துகொள்ள முடியாது. யாரும் தங்கள் உண்மையான அடையாளத்தில் உலவ மாட்டார்கள். நல்லவர்கள்கூடத் தங்கள் சுய அடையாளங்களை மறைத்து விபிஎன் போன்று அடையாளம் மறைக்கப்பட்ட வழிகளில் இருள் இணையத்தை அணுகுவதுதான் பாதுகாப்பு என்கிறார்கள் நிபுணர்கள்.

இணையத்தின் அன்டர்வேர்ல்டு

இருள் இணையத்தைப் பொறுத்தவரை நல்லவை கெட்டவை என்று எல்லாமே கிடைக்கும். இணையத்தின் அன்டர்வேர்ல்டு என்று இதைச் சொல்லலாம். போதைப் பொருட்கள், ஆயுதங்கள் என்று சகஜமாகப் புழங்கும். அமேசான் போன்ற சேவைகளுக்கு இணையாக நீங்கள் கேட்பதைச் சரியான நேரத்தில் வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும் தளங்களும் இங்கு உண்டு. அமெரிக்காவில் பல மருந்துகளை நீங்கள் மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்க முடியாது. அப்படியான மருந்துகளையும் இங்கே கூறுகட்டி விற்கிறார்கள். பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் வாயிலாகத்தான் கொடுக்கல் வாங்கல் என்று அனைத்தும். டார்க் வெப் வழியாக பேரத்தை முடித்துவிட்டு நேரில் சந்தித்து ரொக்கமாக பரிமாற்றம் செய்பவர்களும் உண்டு.



இப்படியாகப்பட்ட முட்டுச் சந்து போன்ற இடத்தில்தான் ரான்சம்வேர் மூலம் திருடப்பட்ட தரவுகளையும் தகவல்களையும் விற்பனைக்காக வைத்திருப்பார்கள். அதற்காகவே பிரத்யேக தளங்கள் உண்டு. சமீபத்தில் இந்தியாவில் டாமினோஸ் பீட்சா வாடிக்கையாளர்களின் பெயர், தொலைபேசி எண், முகவரி என்று மொத்தமும் அங்கு விற்பனைக்கு இருந்தது. ரான்சம்வேர் மூலம் திருடப்பட்ட தகவல்களை இங்குதான் விற்றுவிடுவதாக மிரட்டுவார்கள். சாம்பிளுக்கு கொஞ்சம் பார்வைக்கு வைத்திருப்பார்கள். இப்போது நீங்கள் டாமினோஸ் போல ஒரு பீட்சா செயின் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் நோகாமல் ஒரு பெரிய வாடிக்கையாளர் பட்டியலே உங்கள் கைக்கு வந்துவிடும் அல்லவா?

ஆனால் டார்க் வெப் என்றாலே முழுவதும் தீமைதான் என்று பொருள் இல்லை. புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் பலர் தங்கள் அரசுகளின் சதிகளையும் ஊழல்களையும் பற்றி அம்பலப்படுத்தும் இடமாகவும் இது இருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு சர்வ வல்லமை பொருந்திய பெரும்புள்ளியின் முறைகேடு தொடர்பான ஆவணங்கள் உங்களிடம் இருக்கிறதென்றால் அதைச் சாதாரண இணையத்தில் வெளியிட்டால் அடுத்த பத்து நிமிடங்களில் அந்த சர்வரை முடக்கி குறைந்தபட்சம் இந்தியாவில் அது தெரியாமல் செய்ய முடியும். இதுவே இருள் இணையம் என்றால் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் அந்த சர்வர் எங்கு இருக்கிறது என்றுகூடக் கண்டுபிடிக்க முடியாது. அதற்கு யார் சொந்தக்காரர் என்றும் கண்டுபிடிக்க முடியாது. உங்களிடம் வந்து யாரும் ஆதார் எண் கொடு என்று கேட்க மாட்டார்கள். நீங்கள் செல்லும் தளங்கள் அனைத்தையும் குறித்து வைத்து அரசாங்கம் கேட்டால் சட்டாம்பிள்ளை போல் கொடுக்க மாட்டார்கள். நான் இணையத்தில் என்ன செய்கிறேன் என்பது என் தனிப்பட்ட விவகாரம் என்ற கொள்கை உடையவர்களும் இந்த இருள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.



இந்த நேரத்தில் ஒரு கேள்வி வரும். இப்படியான ஒரு பிரச்சினையை ஒரேயடியாக மூடி வைத்துவிடலாமே என்று. அது அத்தனை சுலபமல்ல. உண்மையில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த டார்க் வெப்பை உருவாக்கியதே உளவு அமைப்புகளும் ராணுவ அமைப்புகளும்தான். சாதாரண இணையத்திலோ ஆழ் இணையத்திலோ தங்கள் அடையாளத்தை அவர்கள் வெளிப்படுத்திக்கொள்ள முடியாது. அவர்களுடைய பரிமாற்றத்துக்காக இது அவர்களுக்குத் தேவை. உண்மையில் இணையமே அப்படிப் பாதுகாப்பு நிறுவனங்களின் தேவையிலிருந்து உருவானதுதான். அது எப்படிப் பல பரிமானங்களை எடுத்துக்கொண்டதோ அது போல இருள் இணையமும் விரிவடைந்துவிட்டது. தொழில் நுட்பரீதியாகச் சொல்லப்போனால் சாதாரண இணையம் இருக்கும்வரை இருள் இணையமும் இருக்கும். இணையத்தையே மொத்தமாக நிறுத்தி வைக்காமல் இதைத் தடை செய்ய முடியாது என்பதோடு நிறுத்திக்கொள்ளலாம்.



உலக நாடுகள் அனைத்தும் இணைந்து செயல்பட்டால் ஓரளவு கிரிமினல் செயல்பாடுகளைக் குறைக்க முடியும். அது குறித்து அடுத்த கட்டுரையில் காண்போம்.

No comments:

Post a Comment

Post Top Ad