மேட்டூர் நீர் வர தாமதம்: நெல் மணிகள் முளைக்காமல் 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் பாதிப்பு
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்திற்கு 22 ஆம் தேதி வந்த நிலையில் போதிய அளவு தண்ணீர் வரத்து இல்லாமல் ஆறுகளில் இருந்து வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாமல் வயல்களுக்கு செல்லாமலும் இருக்கின்றது.
இதன் காரணமாக கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட சீராவட்டம் ஆற்று பாசன பகுதியில் கீழையூர் ஈசனூர் , வெண்மணிச்சேரி மேலபிடாகை, கருங்கண்ணி ,சோழ வித்யாபுரம் திருமணஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட நெல் மணிகள் முளைக்காமல் உள்ளன.
மேலும், புழுதி உழவு செய்து வயல்களில் தெளித்த நெல்மணிகளை காக்கை ,குருவிகள் மற்றும் எறும்புகள் உணவிற்காக தின்று விடுகின்றன. ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்து நேரடி விதைப்பில் ஈடுபட்ட நிலையில், உரிய காலத்தில் நெல்மணிகள் முளைக்காத காரணத்தால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment