ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்திக்கிறார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 25, 2021

ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்திக்கிறார்!

ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்திக்கிறார்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். நாளை காலை 10 மணிக்கு மேல் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவர் சந்திக்கவுள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது மேகதாது பிரச்சினை குறித்து அவர் பேசுவார் என்று தெரிகிறது

அதிமுகவில் தற்போதைய இரட்டை தலைமையில் பிரச்சினை நிலவி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கட்சியை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் என அனைத்தையும் எடப்பாடி சாதித்துக் கொண்ட நிலையில், தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஓபிஎஸ் காத்திருந்தார்.

ஆனால், அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமளிக்கப்படவில்லை. மாறாக பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகனுக்கு இணையமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் நிலை நிறுத்தப்பட்டது.



அத்துடன், அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர், உட்கட்சித் தேர்தல் , பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளும் அதிமுகவை சூழ்ந்துள்ளன. இதனிடையே, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தேர்தலில் தோல்வியை தழுவினோம் என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். மேலும், சசிகலா ஆடியோக்களை ரிலீஸ் செய்து வருகிறார். சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வந்து எடப்பாடியை ஓரங்கட்டும் முயற்சியில் ஓபிஎஸ் ஈடுபட்டுள்ளார். ஆனால், அவரை கட்சிக்குள் கொண்டு வர ஈபிஎஸ் முட்டுக் கட்டை போட்டு வருகிறார்.

இத்தகைய சூழலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் பாஜக மேலிடத் தலைவர்களை சந்திக்கும் அவர், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், அண்மையில் மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அதிமுகவினருக்கு வாய்ப்பு கொடுக்காதது பற்றியும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுதவிர, அதிமுகவில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் டெல்லி மேலிடத்திடம் ஓபிஎஸ் பேச வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad