செல்போனில் ஆன்லைன் கல்வி: வெளியான அதிர்ச்சி தகவல்!
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே கல்வி கற்று வருகின்றனர். இதற்காக எத்தனையோ இடர்பாடுகளுக்கு மத்தியில் தங்களது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் செல்போன்களை வாங்கிக் கொடுத்து வருகின்றனர். ஆனால், ஆன்லைன் கல்வி, செல்போன் பயன்பாட்டில் பல்வேறு சிக்கல்களும் நிலவி வருகின்றன. பெரும்பாலான மாணவர்கள் கற்றலுக்காக செல்போன்களை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை.
இந்த நிலையில், 6 மாநிலங்களில் உள்ள 60 பள்ளிகளை சேர்ந்த 3,491 மாணவ, மாணவிகள், 1,534 பெற்றோர்கள், 786 ஆசிரியர்கள் என மொத்தம் 5,811 பேரிடம் தேசிய குழந்தைகள் நல ஆணையம் குழந்தைகளின் செல்போன் பயன்பாடு தொடர்பாக ஆய்வு நடத்தியது. அதில், செல்போன்களை கற்றலுக்காக 10 சதவீத மாணவர்கள் மட்டுமே பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. செல்போன் பயன்பாட்டு மூலம் 37.15 சதவீத மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில் 10 முதல் 17 வயது வரையிலான மாணவர்களிடம் அதிகளவிலான கருத்துகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக, 14 மற்றும் 15 வயதுடைய தலா 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டுள்ளனர். ஆய்வு முடிவில், “ஆன்லைன் வகுப்புகளுக்காக 62.6 சதவீத மாணவர்கள் தங்களின் பெற்றோர்களின் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். 8 முதல் 18 வயதுடைய 30.2 சதவீத மாணவர்களிடம் சொந்த ஸ்மார்ட்போன்கள் உள்ளது. 19 சதவீதம் பேர் மடிக்கணினி மூலம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள்” என்று தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment