கேப்டனுக்கு ஜாக்பாட்; திமுக வியூகத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்!
தமிழகத்தில் எஞ்சிய 9 மாவட்டங்களுக்கும் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. இதற்கான வேலைகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி தொண்டர்களை களப்பணியாற்ற முடுக்கி விட்டுள்ளனர். அடுத்து வரும் தேர்தலை பொறுத்தவரையில் பிரதானமானது கூட்டணி வியூகம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அமைந்த அதே கூட்டணியை இருபெரும் திராவிடக் கட்சிகளும் தொடருமா? இல்லை ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்களால் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் திமுக கூட்டணிக்குள் நிகழும் உரசல்கள் வெளியில் கசியத் தொடங்கியுள்ளன. அதாவது, தமிழகம் முழுவதும் உள்ள 15 மேயர் பதவிகளில் ஐந்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கேட்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் திமுக தரப்போ ஒன்றுக்கு மேல் தருவதற்கு மனமின்றி இருக்கிறதாம். கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காத பல்வேறு இடங்களில் தனித்து போட்டியிட்டதாக வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையானது. அதேபோல் இம்முறையும் நடந்து விடக்கூடாது என்பதற்காக, தற்போதே போதிய சீட்களை கேட்டு பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீர்மான இருக்கிறது.
இதுதொடர்பாக கட்சி மேலிடம் மூலம் திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை எதிர்பார்க்கும் இடங்கள் கிடைக்கவில்லை எனில் கூட்டணியை முறித்து கொள்ளலாமா என்பது பற்றி கட்சி மேலிடம் ஆலோசிப்பதாக கூறுகிறார்கள் அரசியல் விவரம் தெரிந்தவர்கள்.
இதற்கிடையில் காங்கிரஸிற்கு செக் வைக்கும் வகையில் திமுக வியூகம் ஒன்றை வகுத்துள்ளதாம். அதாவது, கூடுதல் சீட் கேட்டு காங்கிரஸின் பிடி இறுகினால் அப்படியே ரூட்டை தேமுதிக பக்கம் திருப்பி விடுவார்களாம். திமுக - தேமுதிக கூட்டணி உறுதியானால் காங்கிரஸ் கட்சியால் அதிக சீட் கேட்டு நெருக்கடி தர முடியாது. இது மு.க.ஸ்டாலினுக்கு சாதகமாக போய் முடியும் என்கின்றனர்.
இந்த கூட்டணி வாக்கு வங்கி அரசியலிலும் சாதகமான அம்சங்களை உண்டாக்கி தரும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு என்பது தென் மாவட்டங்களில் பரந்து விரிந்தது. ஆனால் வட மாவட்டங்களில் பெரிதாக இல்லை. விஜயகாந்த் அவர்களின் தேமுதிகவை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் பரவலான வாக்கு வங்கியை பெற்றுள்ளது.
பலம் வாய்ந்த கூட்டணி தலைமையை தேர்ந்தெடுக்க தவறுவதால் தேய்பிறையாக தேமுதிக காணப்படுகிறது. மேலும் பாமக பலம் வாய்ந்து விளங்கும் வட மாவட்டங்களில் தேமுதிக மூலம் ஓரளவு வாக்குகளை கவர்ந்து விட முடியும் என்பது திமுகவின் கணக்கு. ஒருவேளை காங்கிரஸ் விடாப்பிடியாக வெளியேறினால் கூட திமுக - தேமுதிக கூட்டணி பலமான வாக்கு வங்கியாக காணப்படும் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் கூட உடல்நலம் விசாரிப்பதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றிருந்தது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது. இதன் பின்னணியில் உள்ளாட்சி தேர்தல் வியூகம் இருப்பதாக அப்போதே சொல்லப்பட்டது. இதற்கு கைமாறாக விஜயகாந்த் குடும்பத்தில் ஒருவருக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்க திமுக முன்வந்ததாகவும் கூறப்பட்டது.
எனவே அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல் திமுகவை விட காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் தனக்கு சாதகமான அம்சங்களை பெறுவதற்காக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் ஸ்கெட்ச் போட்டு கச்சிதமாக காய்களை நகர்த்துவார் என்பதிலும் சந்தேகமில்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
No comments:
Post a Comment