நடிகர் விஜய் நேர்மையான மனிதர்: சான்றிதழ் கொடுக்கும் ஒபிஎஸ் மகன்!
சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் ரோல்ஸ்ராய்ஸ் கார் வரிவிலக்கு விவகாரம் தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் அனைத்து தரப்பினரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். இந்த சூழலில் தேனியைச் சேர்ந்த அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ பன்னீர் செல்வத்தின் இளைய மகன் விப ஜெயபிரதீப் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உழைப்பால் உயர்ந்தவர்களை அனைவரும் மனதார பாராட்ட வேண்டும். சினிமா துறையில் தனது சொந்த உழைப்பால் உயர்ந்து, தான் வாங்கும் ஊதியத்திற்கு முறையாக வருமான வரியாகக் கோடிக்கணக்கான பணத்தை அரசிற்குச் செலுத்தி வருபவர் நடிகர் விஜய்.
அந்த பணம் பல ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிக்கரமாக இருந்துள்ளது. எப்போதும் ஒரு மனிதரின் நிறைகளைக் குறைவாகப் பேசுவதும், சிறுசிறு குறைகளை மிகைப்படுத்திப் பேசுவதும் இயல்பாக இருக்கிறது.
மேலும் இறக்குமதி செய்த வாகனங்களுக்கு வரிவிலக்கு கேட்பது அவரவரின் உரிமை சார்ந்தது. இந்த உரிமை நடிகர் விஜய்க்கும் உண்டு. சினிமா பிரபலம் என்றால் அவருக்குப் பொருந்தாது என எதுவுமில்லை. இதேபோல் 2012இல் வரிவிலக்கு கேட்டு சச்சின் டெண்டுல்கர் எனப் பலர் கோரிக்கை வைத்தார்கள். இதில் சச்சினுக்குச் சட்டத்திருத்தம் கொண்டுவந்து, மத்திய அரசு ரூ ஒரு கோடியே 13 லட்சத்திற்கு வரி விலக்கு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது .
எனவே சரிவரப் புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த மனிதராக இருந்தாலும் கஷ்டங்களையும் விருப்பு வெறுப்புகளையும் அவமானங்களையும் தாண்டிதான் உயர்நிலைக்கு வரமுடியும். அப்பேற்பட்டவர்களை பாராட்ட மனம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை குறைகள் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் விப ஜெயபிரதீப் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment