சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டாரா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டாரா?

சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டாரா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் பேட்டி தொலைக்காட்சி ஊடகத்தில் வெளியாகிறது. அதில் அவர் 1989இல் சட்டமன்றத்தில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் பற்றிப் பேசியிருக்கிறார். அப்போது அந்த இடத்தில் இருந்தவன் என்னும் முறையில் அது குறித்த என் அனுபவங்களைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
1989 சட்டமன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது. நான் அப்பொழுது வேட்பாளராக கோவில்பட்டி தொகுதியில் திமுக போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய நேரம். 1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி அன்று பட்ஜெட் முதல் நிதி நிலை அறிக்கையை முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்யும்பொழுது நான் சட்டமன்றத்தில் பார்வையாளர் மாடத்திலிருந்து கவனித்தேன். மேலிருந்து கீழே சட்டமன்ற நிகழ்வுகளை சரியாக நன்றாக கவனிக்க முடியும்.

அன்று நடந்தது என்ன?

பட்ஜெட் தாக்கல் அன்று அதிமுகவினர் கூட்டம் கூட்டமாக கோட்டைக்கு வந்தனர். பல கார்கள் புடைசூழ, எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா கோட்டைக்கு 10.50 மணிக்கு முன்னரே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் வந்தார். சட்டசபையில் தனது இருக்கையில் அமர்ந்தார். 11 மணிக்குச் சபை கூடியது. சபாநாயகர் தமிழ்க்குடிமகன், திருக்குறளை வாசித்தார். உடனே சட்டசபை காங்கிரஸ் துணைத் தலைவர் குமரி அனந்தன் எழுந்து, ''ஜெயலலிதா கடிதம் விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் துரை, சபையின் உரிமையை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் கலைஞர் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவருகிறோம்” என்றார். மூப்பனார், எஸ்.அழகர் சாமி (சிபிஐ) ஆகியோர் அவையில் இருந்தனர்


அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா எழுந்து, ''முதல்வர் மீதும் போலீஸ் கமிஷனர் மீதும் உரிமை மீறல் தீர்மானத்தை கொடுத்துள்ளேன். எனது டெலிபோன் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. முதல்வரும் அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். அதற்கான ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டுவருகிறேன்'' என்று பேசினார்.

வழக்கத்துக்கு மாறாக, சஃபாரி உடையில் வந்திருந்த முன்னாள் பேரவை தலைவர் பி.எச். பாண்டியன் பேசினார். அவர் திமுகவுக்கு ஆதரவாகப் பேசியதால் அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநயகர் தமிழ்க்குடிமகன், “பி.எச். பாண்டியன் இருக்கையில் அமர வேண்டும்” என்று உத்தரவு போட்டுவிட்டு, “இங்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமை மீறல் பிரச்சினை குறித்து அலசி ஆராய்ந்து வரும் திங்கள்கிழமை பதில் கூறுகிறேன். இப்போது பட்ஜெட் உரையை முதல்வர் வாசிக்கலாம்' என்று அறிவித்தார். கருணாநிதி பட்ஜெட் உரையை வாசிக்க எழுந்தார்.



அதிரடிக் காட்சிகள் அரங்கேற்றம்

உடனே ஜெயலலிதா எழுந்து ஓர் அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார். ''முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று அவர் சொன்னவுடன் அதிமுக உறுப்பினர்கள் சிலர் முன்னேறிச் சென்று முதல்வரின் கையில் இருந்த பட்ஜெட் உரையைக் கிழித்தனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி நழுவியது.செருப்புகள் வீசப்பட்டன. எழுந்தவுடனே “யூ கிரிமினல், எப்படி நீங்கள் சமர்ப்பிக்க முடியும்?” என்று ஜெயலலிதா கேட்டபோது, கருணாநிதி ஏன் என்று ஒரு கேள்வி கேட்டார். உடனே கருணாநிதியின் முகக் கண்ணாடியை நோக்கிக் கையால் அடிக்கவும் சிலர் பாய்ந்ததெல்லாம் உண்டு.

மு.கண்ணப்பன் உடனே அன்பழகனைத் தாண்டி, சாதிக் பாட்சா, நாஞ்சில் மனோகரன் ஆகியோரைத் தாண்டி, முன்னிலைக்கு வந்தார். அதற்கு அடுத்துதான்

துரைமுருகன் இருந்தார். அவரும் எழுந்து நின்றார். துரைமுருகன் ஜெயலலிதாவின் சேலையை இழுத்தார் என்று பிறகு சொன்னார்கள். ஆனால், துரைமுருகன், கருணாநிதி, அன்பழகன், சாதிக் பாட்சா, நாஞ்சில் மனோகரன், அதற்குப் பிறகு மு.கண்ணப்பன், இவர்களுக்கு அப்பால்தான் இருந்தார். அதன் பிறகு அறநிலையத் துறை அமைச்சர் கே.பி.கந்தசாமி இருந்தார். கோ.சி.மணி, ஆற்காடு வீராசாமி, பொன் முத்துராமலிங்கம், வீரபாண்டிய ஆறுமுகத்தைத் தாண்டி அந்த அமைச்சர்கள் வரிசையில் வடகோடியில் துரைமுருகன் இருந்தார். ஆனால், துரைமுருகன்தான் எதிரிலிருந்து துச்சாதனனைப் போலப் புடவையை இழுத்தார் என்று பிரச்சாரம் செய்தார்கள்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, செங்கோட்டையன் போன்றவர்கள் எல்லாம் ஜெயலலிதாவைச் சுற்றி நின்று ஜெயலலிதா ஆதரவாகவும் திமுக ஆட்சிக்கு எதிராகவும் சத்தம் எழுப்பினர். அதிமுக உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், செங்கோட்டையன், அண்ணாநம்பி முசிறி தங்கவேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உடன் இருக்க, சபையிலிருந்து வெளியேறிய ஜெயலலிதா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.



''துரைமுருகன் எனது சேலையைப் பிடித்து இழுத்துக் கிழித்தார். அப்போது கீழே விழுந்ததில் எனது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதலமைச்சர் மிகவும் ஆபாசமாக ஒரு வார்த்தையைச் சொல்லித் திட்டினார். திமுகவினர் என்னுடைய தலையைக் குறிபார்த்துத் தாக்குதல் தொடுத்தனர். சட்டசபைக் காவலர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருந்தார்கள். இந்த அரசு நீக்கப்பட வேண்டும்'' என்று பேட்டி கொடுத்தார்.

முதல்வர் கருணாநிதிக்குக் கண்ணில் சிறிய காயம் ஏற்பட்டு உடனே மருத்துவர் வந்து பேரவைத் தலைவர் தமிழ்க்குடிமகன் அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

திருநாவுக்கரசர், செங்கோட்டையன், அண்ணாநம்பி முசிறி தங்கவேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் சிலருடன் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார் ஜெயலலிதா. போயஸ் கார்டனுக்குத் திரும்பிய பிறகு செய்தியாளர்களிடம், ஒரு பெண்ணுக்குச் சட்டசபையிலேயே பாதுகாப்பு இல்லை எனக் கூறினார்.



இன்றைக்கு எது வேண்டுமென்றாலும் பேசலாம். 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, மக்களுக்கு மறதி அதிகம் என்று நினைத்துக்கொண்டு பலரும் பேசுகிறார்கள்.
அன்றைக்கு என்ன நடந்தது என்பதை நான் கண் முன் பார்த்தேன். அன்றைக்குப் பத்திரிகையாளராக இருந்த பலரும் இதையெல்லாம் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்கள். அன்றைக்கு மாடத்திலிருந்து கவனிக்கும்போது மேலிருந்து பார்த்தால் தெளிவாக தெரியும்.

துரைமுருகன் அளித்த பதில்

இது குறித்து துரைமுருகனும் சட்டமன்றத்திலேயே பதிவுசெய்திருக்கிறார். 2003ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி அதிமுக ஆட்சியில் பட்ஜெட் விவாதத்தின்போது மீண்டும் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, ''இதே சட்டசபையில் எம்ஜிஆர் தாக்கப்பட்டார். அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. 1989ஆம் ஆண்டு சட்டசபையில் துரைமுருகன் என் சேலையைப் பிடித்து இழுத்தார். என் சேலை கிழிந்துவிட்டது. அப்போது நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். ஆளும்கட்சியினர் அப்போது என்னிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லை'' என்றார்.



துரைமுருகன்: ''நீங்கள் கூறுவது தவறு. நான் உங்களைத் தாக்கவே இல்லை. நீங்கள் கூறும் இடத்திலிருந்து நான் அதிக தூரத்தில் இருந்தேன்'' என்றார்.

இது நடந்து 32 ஆண்டுகளுக்கு மேல் கழிந்துவிட்டன. இன்று சசிகலா இதைப் பற்றிப் பேசி, ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் நேரத்தில், இந்த நிகழ்வை நேரடியாகப் பார்த்தவன் என்ற முறையில் இப்போது இதைச் சொல்ல வேண்டியது என் கடமை. வரலாற்றில் உண்மையான சம்பவங்களைப் பதிவுசெய்ய வேண்டும் அல்லவா?

No comments:

Post a Comment

Post Top Ad