ஈபிஎஸ் வியூகமும், ஓபிஎஸ் கணக்கும்; அதிமுகவில் அதிரடி மாற்றம்!
இந்தியாவில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும். அதிமுகவில் கடைசியாக 2014ஆம் ஆண்டு உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது 7வது முறையாக கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னரும் தேர்தல் நடத்தப்படவில்லை. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்று குற்றம்சாட்டப்பட்டது.
கொரோனா நெருக்கடி காரணமாக தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கால அவகாசம் கேட்டிருந்தது. சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உட்கட்சி தேர்தலுக்கு தயாராகுமாறு கட்சி தலைமை அறிவுறுத்தியிருந்தது. முன்னதாக 2017ஆம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் சசிகலா நியமனத்தை ரத்து செய்துவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் மேற்குறிப்பிட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. இந்த சூழலில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்படாதது பற்றி தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் பதில் இல்லை. எனவே அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தாமல் நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
No comments:
Post a Comment