“இது நெத்தியடி தீர்ப்பு” – அ.தி.மு.க.,வை சாடிய முதல்வர் ஸ்டாலின்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 13, 2021

“இது நெத்தியடி தீர்ப்பு” – அ.தி.மு.க.,வை சாடிய முதல்வர் ஸ்டாலின்!

“இது நெத்தியடி தீர்ப்பு” – அ.தி.மு.க.,வை சாடிய முதல்வர் ஸ்டாலின்!


இரட்டை வேட பா.ஜ.க.,வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.,வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நெத்தியடித் தீர்ப்பு வழங்கியுள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரட்டை வேட பா.ஜ.க.,வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.,வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடித் தீர்ப்பு இது. முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பு தமிழ்நாடு அரசின் உறுதிப்பாட்டிற்கும், முயற்சிகளுக்கும் தொடக்கப்புள்ளி.

மருத்துவக் கல்வி பயில நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வினை, அது முன்மொழியப்பட்ட காலம் முதலே அரசியல் ரீதியாக அதனை எதிர்த்து வருகிறோம். கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு தொடர்பான பாதிப்புகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.


நீட் தேர்வானது தமிழ்நாட்டு மாணவ, மாணவியரிடையே கல்வி, சமூக, பொருளாதார ரீதியாக எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆராய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரிடம் இதுவரை 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து கருத்துகள் குவிந்துள்ளன.

இவற்றை ஆராய்ந்து அதன் மூலமாக தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் நீதியரசர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த அறிக்கை கிடைத்ததும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவிருக்கிறது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்நிலையில் பா.ஜ.க பொறுப்பாளர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இக்குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். ‘நீட் தேர்வை விலக்குவது சட்டரீதியாக இருக்குமானால் அதனை பா.ஜ.க ஏற்கும்’ என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் சொல்லிய நிலையில், அப்பட்டமான இரட்டை வேடமாக அதே பா.ஜ.க.-வின் பொறுப்பாளரால் இத்தகைய மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தங்களின் அரசியல் லாபங்களுக்காக, யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் நலனுக்கு எதிராக இத்தகைய மனுவை அந்தப் பொறுப்பாளர் தாக்கல் செய்திருந்தார்.



ஆட்சியை இழந்த பிறகும் பா.ஜ.க.வின் பாதம் தாங்கி அடிமை சேவகம் செய்யும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, இந்தக் குழுவையே நாடகம் என்று சொன்னார். ‘நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் போடுவதுபோல நாங்கள் போடுகிறோம்; நீங்கள் அதைக் குப்பையில் போடுங்கள்’ என்று பா.ஜ.கவுடன் திரைமறைவு ஒப்பந்த நாடகம் நடத்தி ஒரு முறையல்ல; இரண்டு முறை, தமிழ்நாடு சட்டமன்றத்தையே ஏமாற்றிய பழனிசாமி தான், கழக அரசால் அமைக்கப்பட்ட குழுவை நாடகம் என்று கூறினார்.

நீட் தேர்வுக்கு எதிராக பா.ஜ.க. மனு தாக்கல் செய்ததை ஒரு வரி கூட கண்டிக்க தைரியம் இல்லாத பழனிசாமி, மாணவர் நலன் கருதி தி.மு.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை குறை கூறினார். நீட் தேர்வுக்கு எதிரானவன்தான் நான் என்று பழனிசாமி சொல்லிக் கொள்வதைப் போல கபட நாடகம் வேறு இருக்க முடியுமா?



அப்படி எதிரானவராக இருந்திருந்தால், அனைத்துக் கட்சியினரும் தமிழ்நாடு அரசோடு கைகோத்து, பா.ஜ.க.வின் முயற்சியை முறியடிக்க உயர்நீதிமன்றத்தில் களமிறங்கியபோது, தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது ஏன் என்று விளக்க முடியுமா?

மேலும் வழக்கில் நீதிபதியின் விளக்கத்தை சுட்டிக்காட்டி, “நீட் தேர்வுக்கு எதிரான நமது போராட்டத்தில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும். மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் இது தொடக்கப் புள்ளி.



மாணவர்களின் உரிமை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமையும் இந்தத் தீர்ப்பின் மூலமாக நிலைநாட்டப்பட்டுள்ளது. முதல் வெற்றியே, முழு வெற்றியாக மாறும் என்ற நம்பிக்கையை தமிழ்நாடு அரசுக்கு இந்தத் தீர்ப்பு அளித்துள்ளது.

நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை, அதன் மூலமாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் ஆகியவை அடுத்தடுத்த காலங்களில் வரிசையாக நடக்க இருக்கின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதி அதற்குள் அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்த நடவடிக்கைகள் அதற்குள் முடிவடைய இயலாத சூழல் உள்ளது.


தமிழ்நாடு அரசு, சட்டபூர்வ நடவடிக்கையில் இருக்கும் இந்த நேரத்தில் நடக்கும் இந்த ஆண்டுக்கான தேர்வை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது உண்மையில் வருந்தத்தக்கதே. ஆனாலும் இறுதியில், நீட் தேர்வினால் நமது மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்ற நிலையை நிச்சயம் உருவாக்குவோம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad