இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் என்ன?

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் என்ன?

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களை எம்.பி. வைகோ, “இலங்கையின் உள்நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு நீதி விசாரணை கோரி இருக்கின்றார்களா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன? இலங்கை அரசு இதுவரை எந்தவிதமான உள்ளக விசாரணையும் மேற்கொள்ளாத நிலையில், இனியும் அதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழலில், பன்னாட்டு நீதி விசாரணை நடைபெறுவதற்கான முயற்சிகளை, இந்திய அரசு மேற்கொள்ளுமா?

இலங்கையில் முஸ்லிம்கள் உடல் அடக்க உரிமைகளைத் திரும்பத் தருவதற்கும், தமிழர்களுடைய நிலங்களில் இலங்கைப் படையினர் நிலை கொண்டு, தமிழர்களைக் கண்காணித்து வருவதையும், அவர்கள் மீது தொடர் அடக்குமுறைகளைத் தடுப்பதற்கும், தூதரக முறையில் இந்தியா ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டதா?” என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.


அதற்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் முரளிதரன், இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு விசாரணை கோரி இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அளித்துள்ள பதிலில், “பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு சமயங்கள் கொண்ட இலங்கை நாட்டில், தமிழர் உள்ளிட்ட அனைத்துக் குடிமக்களும் சமமாக வாழ்வதற்கும், பாதுகாப்பு மற்றும் சமய நல்லிணக்கம் நிலவுதற்கும், அவர்களுடைய முன்னேற்றம், எதிர்காலக் கனவுகளை, ஒன்றுபட்ட இலங்கை என்ற நாட்டுக்கு உள்ளே நிறைவேற்றிக் கொள்வதற்கும், இந்தியா எப்போதும் உறுதுணையாக இருந்து வருகின்றது.

இந்தப் பொருண்மையில், இந்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருகின்றது; பல்வேறு நிலைகளில் இருதரப்பு பேச்சுகள் நடைபெற்று உள்ளன; இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றது.

2019, 2020 ஆம் ஆண்டுகளில், இலங்கைக் குடிஅரசின் தலைவர் இந்தியா வருகை தந்தபோதும், 2020 செப்டெம்பர் 26 ஆம்நாள், இரண்டு நாடுகளின் பிரதமர்கள் இணையக் காணொளி வழியாக நடத்திய இருதரப்புப் பேச்சுகளிலும், 2021 ஜனவரி மாதம், இந்திய அயல் உறவு அமைச்சர் இலங்கை சென்றபோதும், மேற்கண்ட கருத்துகளை, இந்தியா வலியுறுத்தி இருக்கின்றது.

ஐ.நா.மனித உரிமைகள் மன்றத்தின் (United Nations Human Rights Council - UNHRC), 46 ஆவது கூட்டத் தொடரில், சமத்துவம், நீதி, அமைதி, கண்ணிய வாழ்வு என்ற தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்தியது. தமிழர்களின் உரிமைகளை மதிக்கின்ற வகையில், உண்மையான அதிகாரப் பகிர்வுதான், இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் என்பதையும் எடுத்துக் கூறியது.



கூடுதலாக, இலங்கை அரசு நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவும், மறுவாழ்வுப் பணிகளைச் செயல்படுத்தவும், தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், பன்னாட்டு சமுதாயத்துடன் இணைந்து அத்தகைய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களும், விடுதலை உணர்வுடன், மனித உரிமைகள் பாதுகாப்புடன் வாழ வகை செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஈழத்தில் இனப்படுகொலை 2009இல் நடந்து தமிழர்கள் கொன்று குவிக்க பட்டனர் இன்னமும் நீதி விசாரணை கிடைக்கவில்லை. இன்னமும் இந்தியா இலங்கையை நம்பிக்கொண்டு இருக்கிறது. இலங்கை சீனா வை காட்டி இந்தியாவை ஏமாற்றினார்கள். சீனா பக்கம் இலங்கை போய் விடுமோ என்று இந்தியா ஒட்டு மொத்த தமிழர்களையும் ஏமாற்றினார்கள்.இலங்கை எப்போதும் சீனா பக்கம் தான் போவார்கள் அப்போதே தமிழர்கள் ஈழ தமிழர்களுக்கு உதவுங்கள் என்றது ஆனால் இந்தியா இலங்கைக்கு உதவினார்கள். இன்று சீனாவுக்கு இலங்கையில் தன்னாட்சி பெற்ற நிலப்பகுதியை கொடுத்து உள்ளது. ltte இருந்த வரைக்கும் இந்தியாவுக்கு மிக பெரிய பாதுகாப்பு அரண் ஆக ltte விளங்கியது அதற்கு பதிலாக இந்தியா இலங்கைக்கு உதவுகிறேன் என்று சொல்லி இலங்கைக்கு ஆயுதம்,satelite உதவி போர் பயிற்சி கொடுத்து ஈழ தமிழர்களை கொன்றார்கள்.இன்று இலங்கை சீனாவுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிரா ஒரு பெரிய ஆபத்தாக மாறியுள்ளது.இப்போதாவது மனித உரிமை கவுன்சிலலில் இலங்கைக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா
    குரல் கொடுக்கவேண்டும் மற்றும் இந்தியாவில் இலங்கையுடனான வெளியுறவு கொள்கையை மாற்ற வேண்டும்

    ReplyDelete

Post Top Ad