குழந்தைகளின் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 21, 2021

குழந்தைகளின் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?

குழந்தைகளின் இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும்?


குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புப் பிரச்சாரம் (Campaign Against Child Labour) என்னும் அரசு சாரா அமைப்பின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்திய கள ஆய்வு குழந்தைகள் கல்வி குறித்த கவலை தரும் செய்திகளைச் சொல்கிறது. கொரோனா பெருந்தொற்று மருத்துவ, பொருளாதார, உளவியல் ரீதியாக மட்டுமின்றிக் குழந்தைகளின் எதிர்கால நலனின் மீதும் தாக்கம் செலுத்தக்கூடியதாக உள்ளது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக மேற்படி ஆய்வு கூறுகிறது. 24 மாவட்டங்களில் உள்ள சிறார்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகளில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தவர்களின் விகிதம் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு 79% ஆக அதிகரித்துள்ளது தெரியவந்திருக்கிறது.

பள்ளிகள் மூடப்பட்டது மட்டும் இதற்குக் காரணமில்லை. பள்ளிகள் மூடினாலும் பல மாணவர்கள் இணைய வழியில் படிக்கிறார்கள். ஆனால், அதற்கான வசதி இல்லாதவர்கள் படிப்பைத் தொடர முடியாத நிலையில் சிக்கிக்கொண்டார்கள். பள்ளிக்கூடத்திற்குப் போகாத குழந்தைகளில் ஒரு பிரிவினர் வேலைக்குப் போக வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்கள். பொது முடக்கத்தால் அவர்களுடைய பெற்றோருக்கு வேலை இழப்பு ஏற்பட்டதுதான் இதற்குக் காரணம்.

குழந்தைகளிடம் ஸ்மார்ட் போன் இருப்பது பெரிய பிரச்சினையாக உள்ளது என்பது நடுத்தர வர்க்கத்தின் அங்கலாய்ப்பு. ஸ்மார்ட் போன் இல்லாததாலேயே கல்வியைத் தொடர முடியவில்லை என்பது பொருளாதார ரீதியில் கீழ்த் தட்டுக்களில் இருப்பவர்களின் மனக்குறை. ஸ்மார்ட் போன் இல்லாதது மட்டுமல்ல, இணைய இணைப்பு இல்லாதது, இருந்தாலும், போதிய வேகத்தில் இணைப்பு கிடைக்காதது ஆகிய பிரச்சினைகளும் இவர்களுக்கு இருக்கின்றன. இதுபோன்ற பல காரணங்களால் பல சிறுவர்கள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. பொது முடக்கத்தில் அரசு படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்தபோது இந்தக் குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் வேலைக்கு அனுப்பத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் குழந்தைகள் பள்ளி செல்லவில்லை எனபது இதற்கு ஒரு காரணம். பொது முடக்கக் காலத்தில் ஏற்பட்ட வருமான இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்பது இன்னொரு காரணம்.



இந்தச் சிறுவர்களில் பலர் தினமும் நான்கு மணிநேரம் முதல் எட்டு மணிநேரம் வரை வேலை செய்திருக்கிறார்கள் என்பதையும் இந்த ஆய்வு காட்டுகிறது. ஒரு நாளைக்குக் குறைந்தது ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.300 வரை இவர்கள் கூலி பெற்றார்கள். இதனால் பலர் உடல்ரீதியான, மனரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறினார்கள். 18.6 சதவீதச் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகக் கூறினார்கள்.

பெருந்தொற்றினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் அவர்களுடைய பணிச் சூழலின் பிரச்சினைகளும் பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரித்திருப்பதாக எடுகோ (Educo) என்னும் குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு கூறுகிறது. ‘குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புப் பிரச்சாரம்’ அமைப்பும் எடுகோவும் இணைந்து அண்மையில் நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் இந்தப் பிரச்சினைகள் அலசப்பட்டன.


“உலகளாவிய பெருந்தொற்றினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரிவினரில் குழந்தைகளும் அடக்கம்” என்று எடுகோவின் இந்தியக் கிளையின் இயக்குநர் குருபிரசாத் கருத்தரங்கில் தெரிவித்தார். குழந்தைகள் மீதான வன்முறையும் அத்துமீறல்களும் பெருந்தொற்றின்போது பெருமளவில் அதிகரித்திருப்பதாக அவர் கூறினார். பணிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், அவர்களுடைய பணிச்சூழலும் முன்பைவிட மோசமாயிற்று என்றார் அவர்.

பெருந்தொற்றின் விளைவாக 2022ஆம் ஆண்டின் முடிவில் மேலும் 90 லட்சம் குழந்தைகள் வேலைக்குச் செல்வதற்கான நிர்ப்பந்தத்திற்கு ஆளாவார்கள் என்று யூனிசெஃப் அமைப்பும் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பும் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது.

பள்ளிகளைத் திறப்பது குறித்த பேச்சுக்கள் நடந்துவரும் இந்தச் சமயத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கு முன் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் உள்ள குழந்தைகள் எத்தனை பேர் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கிறார்கள் என்பதையும், எத்தனை குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தமிழ்நாடு அரசு கணக்கெடுக்க வேண்டும்.



குழந்தைகள் யாரும் விரும்பி வேலைக்குச் செல்வதில்லை. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை விரும்பு வேலைக்கு அனுப்புவதில்லை. தவிர்க்க முடியாத காரணங்களால்தான் குழந்தைகள் வேலைக்குச் செல்வது நடக்கிறது. எனவே பெற்றோரின் வேலையின்மை, வருமான இழப்பு ஆகியவற்றுக்குத் தீர்வு காணாமல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது. ஊரடங்கின்போது வேலை இல்லாததால் ஊரடங்கு நீக்கப்பட்டதும் குடும்பத்தில் முடிந்தவரை அனைவரும் வேலைக்குப் போய் வருமான இழப்பைச் சரிக்கட்ட வேண்டிய நிலைக்கு வறியவர்கள் ஆளாகிறார்கள். பெற்றோரின் வேலை வாய்ப்பு, வருமான வாய்ப்பு ஆகியவற்றுக்கான தீர்வு என்பது தொலைநோக்குத் திட்டங்களால்தான் சாத்தியமாகும். ஆனால், தற்காலிகமாக இவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கலாம். தற்காலிக வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித்தரலாம்.


இவற்றைச் செய்யாமல் குழந்தைகள் வேலைக்குப் போகக் கூடாது என்று உத்தரவு போடுவதோ குழந்தைகளை வேலைக்கு அனுப்பாதீர்கள் என்று பெற்றோருக்கு அறிவுரை கூறுவதோ யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத கொடுமையாகவே இருக்கும்.

சென்ற ஆண்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளான குழந்தைகள் இந்த ஆண்டு பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு அரசு திட்டம் தீட்ட வேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்துவது என்பது தலைமுறைகளைத் தாண்டியும் தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பதை மனதில் கொண்டு இதற்கு முன்னுரிமை தந்து அரசு யோசித்துச் செயல்பட வேண்டும். பொது மக்களில் பலருக்கும் ஊரடங்கு முடிந்ததும் இயல்பு வாழ்க்கை தொடங்கிவிட்டது. ஆனால், இந்தக் குழந்தைகள் இன்னமும் தங்களுக்கான இயல்பு வாழ்க்கையான பள்ளிகளுக்குத் திரும்பச் செல்வதற்கான சூழல் உருவாகவில்லை. அவர்கள் வேலை என்னும் புதிய இயல்புக்குப் பழகிக்கொண்டிருக்கிறார்கள். தொழில் வளர்ச்சி போன்றவற்றிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கொடுத்து இதைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment

Post Top Ad