ஏமாற்றத்துடன் திரும்பும் பாஜக எம்.எல்.ஏ.க்கள்: செம கோபத்தில் அமித் ஷா!
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக நான்கு இடங்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவைக்குள் பாஜக உறுப்பினர்கள் சென்றுள்ளனர். இதனிடையே, தேர்தல் செலவுக்கு கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை இங்குள்ள தலைவர்கள் செலவிடமால் சுருட்டி விட்டதாக கட்சி நிர்வாகிகள் சிலர் குற்றம் சாட்டினர்.
ஆனால், பணம் ஏதும் கொடுக்கவில்லை என மாநில தலைவர் எல்.முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே, இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், புகார் தெரிவித்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர், மாநில அளவில் தலைவர்கள் மாற்றப்படலாம் என்றும், பாஜக தலைவர் எல்.முருகனும் மாற்றப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சி.சரஸ்வதி ஆகிய நான்கு பேரும்
பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டவர்களை சந்திக்க டெல்லி சென்றனர். அவர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனும் சென்றுள்ளார்.
இதையடுத்து, பிரதமர் மோடியை எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தமிழக வளர்ச்சிக்காக பிரதமரிடம் இவர்கள் நால்வரும் பேசியதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசியலில் நடக்கிற தேசப் பிரிவினைவாதம், தேசத்துக்கு எதிரான சில சக்திகளுடைய செயல்பாடுகள் இருப்பதை பிரதமர் மோடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அதன்பிறகு, பாஜக எம்.எல்.ஏ.க்கள் குழுவினர், டெல்லியில் முகாமிட்டு மற்ற தலைவர்களையும் சந்தித்தனர். ஆனால், அமித் ஷாவை மட்டும் சந்திக்காமல் இருந்தனர். இவர்களுடனான சந்திப்பை கடந்த நான்கு நாட்களாகவே
அமித் ஷா தவிர்த்து வந்துள்ளார். இதையடுத்து, அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் தமிழகம் திரும்பவுள்ளனர்.
இதுகுறித்து டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகையில், எல்.முருகன் செயல்பாடுகள் மீது அமித் ஷா அதிருப்தியில் இருப்பதாகவும், பாஜக மேலிடம் பணம் கொடுத்ததாக வெளியான தகவல்களால் அவர் அப்செட்டாக இருப்பதால் இந்த சந்திப்பை தவிர்த்து விட்டதாக கூறுகிறார்கள். தனக்கு கிடைக்கும் ரிப்போர்ட்டின் அடிப்படையில் அவரது அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அமித் ஷா பிஸியாக இருப்பதால், பாஜக எம்.எல்.ஏ.க்களை அவர் சந்திக்காமல் தவிர்த்துள்ளதாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment