‘செமன்’, ‘செம்மண்’: தட்டச்சு பிழையால் தப்பிய போக்சோ குற்றவாளிக்கு தண்டனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

‘செமன்’, ‘செம்மண்’: தட்டச்சு பிழையால் தப்பிய போக்சோ குற்றவாளிக்கு தண்டனை!

‘செமன்’, ‘செம்மண்’: தட்டச்சு பிழையால் தப்பிய போக்சோ குற்றவாளிக்கு தண்டனை!


திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தைக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக வடுவூர் காவல் நிலைய போலீஸார் பதிவு செய்த வழக்கு, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், புகார் அளிப்பதில் தாமதம், மருத்துவ ஆதாரங்கள் முழுமையாக இல்லை, குழந்தையின் பிறப்புறுப்பில் செம்மண் மட்டுமே படிந்திருந்தது போன்ற காரணங்களைக் கூறி பிரகாஷை விடுதலை செய்தது. இதனை எதிர்த்து குழந்தையின் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், போக்சோ சட்டத்தின் நோக்கம் மற்றும் எல்லையை முழுமையாக உணராமல் கீழமை நீதிமன்றம் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ளதாக வேதனை தெரிவித்தார். குழந்தைகளை எவ்வாறு சாட்சியமளிக்க முடியும் என்பதை உணராமலும், தாயின் மனநிலையை உணராமலும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.மேலும், காவல்துறை விசாரணையின்போது தாய் அளித்த வாக்குமூலத்தில் குழந்தையின் பெண்ணுறுப்பில் ஆண் உயிரணுக்கள் படிந்திருந்தது என்று வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அதன் ஆங்கில வார்த்தையை செமன் (semen) என்று குறிப்பிடுவதற்கு பதிலாக செம்மண் (semman) என்று பிழையாக தட்டச்சு செய்யப்பட்டதை, குற்றவாளி செம்மண் நிறத்திலான பொருள் எனத் தனக்கு ஆதரவாக எடுத்துக்கொண்டு, ஆதாரம் இல்லை என வாதிட்டுள்ளார். தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் எழுதியதால் வழக்கின் போக்கையே மாற்றிய குற்றவாளியைத் தப்பிக்க விட்டுள்ளனர் என்றும் நீதிபதி அப்போது சுட்டிக்காட்டினார்.இதையடுத்து, இரண்டு வயதுக் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகி உள்ளதால், வழக்கிலிருந்து பிரகாஷ் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ததுடன், அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை நீதிமன்றங்கள் தங்களுக்கான அதிகாரத்தின்படி, வழக்குத் தொடர்பான ஆவணங்களைக் காவல்துறையிடமிருந்து பெற்று, முழுமையாக ஆய்வு செய்து மனதைச் செலுத்தி விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் நீதிபதி அப்போது அறிவுறுத்தினார்.


No comments:

Post a Comment

Post Top Ad