பேருந்து சேவை: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!
போக்குவரத்துத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் சேவைகள் குறித்தும், போக்குவரத்துத்துறை அலகுகளின் செயல்பாடுகள், குறிப்பாக 8 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அரசுப் பேருந்துகளின் பராமரிப்பினை மேம்படுத்திடவும், தடங்களை மறுஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதியினை மேம்படுத்திட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
பொதுப் பேருந்து போக்குவரத்து அமைப்பு, பேருந்து சேவைகள், போக்குவரத்துக் கழகங்களுக்குப் புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்வது, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலைச் செயல்பாட்டுத் திறன், நடைமுறைப் படுத்த வேண்டிய புதிய திட்டங்கள் மற்றும் இணையதளச் சேவைகள் செயல்பாடுகள் ஆகியவை குறித்தும் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல் மாசினைக் குறைத்திடும் வகையில், டீசலுக்குப் பதிலாக மாற்று எரிசக்தி மூலம் அதாவது மின்கலன், இயற்கை எரிவாயு மற்றும் திரவ இயற்கை எரிவாயு மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை இயக்குதல் குறித்தும், எண்ணெய் நிறுவனங்கள் மூலமாகப் போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை மையங்கள் அமைப்பது குறித்தும், அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டடங்களின் மேற்கூரைகளில் சூரியமின் தகடுகளை அமைத்து, மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அப்போது அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment