ஸ்டாலின் இந்த ஊருக்கு போவது இதுதான் ஃபர்ஸ் டைம்!
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவுக்கான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. எழுபதாயிரம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜூலை 6) திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று மாலை சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து தஞ்சாவூர் வழியாக கார் மூலம் திருவாரூர் செல்கிறார்.
திருவாரூர் சென்றதும் முதல் வேளையாக காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயாரும், தனது பாட்டியுமான அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் அங்கிருந்து திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது குடும்பத்திற்கு சொந்தமான இல்லத்திற்கு செல்லும் ஸ்டாலின், அங்குள்ள கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார், அதனைத் தொடர்ந்து இன்றிரவு அவர் அரசினர் இல்லத்தில் ஓய்வு எடுக்கிறார்.
நாளை காலை 9 மணி அளவில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவை முதல்வர் திறந்து வைக்கிறார்.
அதன் பின்னர் கார் மூலம் திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு செல்லும் அவர், அங்கு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் திருவெண்காடு சென்று மதிய உணவை முடித்துக்கொண்டு கார் மூலம் சென்னை திரும்புகிறார். தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறையாக தமது சொந்த ஊரான திருவாரூருக்கு ஸ்டாலின் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment