துறை சார்ந்தவர்களையே துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும் - ராமதாஸ் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, July 18, 2021

துறை சார்ந்தவர்களையே துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும் - ராமதாஸ்

துறை சார்ந்தவர்களையே துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும் - ராமதாஸ்


''கலை அறிவியல் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக மருத்துவம், பொறியியல், வேளாண்மை படித்த பேராசிரியர்களை நியமிக்க முடியாது'' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாககலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களுக்கும் தொழில் மற்றும் தொழில்நுட்பப் பேராசிரியர்களை துணைவேந்தர்களாக நியமிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியை பாதிக்கும் வகையிலான இந்தப் போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தொழில் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்புப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும் வரை அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்வியாளர்கள் தான் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டனர். ஏ.எல்.முதலியார், நெ.து.சுந்தரவடிவேலு, மால்கம் ஆதிசேஷய்யா போன்றவர்கள் பல்வேறு கல்வி பின்புலங்களில் இருந்து வந்தாலும் கல்வி வளர்ச்சி சார்ந்த தொலைநோக்குப் பார்வை இருந்ததால் தான் தாங்கள் வகித்த துணை வேந்தர் பதவிகளுக்கு பெருமை சேர்த்தனர்; இன்றும் அவர்கள் கொண்டாடப்படுகின்றனர்”என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ் மேலும்,


“பின்னாளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம், வேளாண் கல்விக்கு வேளாண்மை பல்கலைக்கழகம், சட்டப்படிப்புக்கு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம், மருத்துவப் படிப்புக்கு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், மீன்வளக் கல்விக்கு ஜெயலலிதா பெயரில் தனி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல், இசை, விளையாட்டு, ஆசிரியர் கல்வி, கால்நடை அறிவியல் ஆகியவற்றுக்கும் தனித்தனியாக சிறப்பு பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

அதன்பின்னர் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் அது சார்ந்த துறையில் வல்லமை பெற்ற, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் தான் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி வருகிறது. தொழில் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்கலைக் கழகங்களுக்கு அவை சார்ந்த பேராசிரியர்கள் மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு வரும் நிலையில், கலை மற்றும் அறிவியல் சார்ந்த பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் அத்துறைகளை சேர்ந்த பேராசிரியர்களை நியமிக்காமல், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட சிறப்புப் படிப்புகளை பயின்ற பேராசிரியர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர். இது மிகவும் தவறான அணுகுமுறை.



பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி என்பது கற்பித்தலைக் கடந்து ஆராய்ச்சி மற்றும் நிர்வாகம் சார்ந்த ஒன்றாகும். தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், காமராசர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் போன்றவை கலை & அறிவியல் வகைப் பல்கலைக்கழகங்கள் ஆகும். இந்தப் பல்கலைக்கழகங்களில் கலை அல்லது அறிவியல் படிப்பில் வல்லமை வாய்ந்தவர்களை துணை வேந்தர்களாக நியமித்தால் மட்டும் தான், அவர்களால் அந்தப் பல்கலைக்கழகம் சார்ந்த பாடத்திட்டங்களை மேம்படுத்துதல், ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் போன்றவற்றை செய்ய முடியும். பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதும், அவர்களின் பிரச்சினைகளை உணர்ந்து தீர்த்து வைப்பதும் அத்துறை சார்ந்த துணைவேந்தர்களால் மட்டுமே சாத்தியமானதாகும்.



ஒரு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கலை அறிவியல் படித்தவரையும், வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சட்டம் படித்தவரையும், சட்டப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இசை கற்றவரையும், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கல்வியியல் நுணுக்கங்களை கற்றவரையும் எப்படி நியமிக்க முடியாதோ, அதேபோல் கலை அறிவியல் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாகவும் மருத்துவம், பொறியியல், வேளாண்மை படித்த பேராசிரியர்களை நியமிக்க முடியாது. அவ்வாறு செய்தால் அது மகிழுந்து ஓட்டி பழகியவரை, விமானம் ஓட்டுவதற்கு அனுமதித்தால் எத்தகைய விளைவுகளும், அழிவுகளும் ஏற்படுமோ, அவை பல்கலைகளிலும் நிகழும். கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும்” என்று இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad