மத்திய அமைச்சரவை விரிவாக்கம்? அ.தி.மு.க.,வில் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி? பிரதமர் மோடி "பலே" ஐடியா - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்? அ.தி.மு.க.,வில் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி? பிரதமர் மோடி "பலே" ஐடியா

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்? அ.தி.மு.க.,வில் யாருக்கு மத்திய அமைச்சர் பதவி? பிரதமர் மோடி "பலே" ஐடியா


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து, அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க., தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரிடம், பிரதமர் நரேந்திர மோடி பல மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடமும், பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க., தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷ் ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து யாரை நீக்கலாம், புது முகங்கள் யார் யாருக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மூத்த மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பியுஷ் கோயல் உள்ளிட்டோர் மூன்று, நான்கு துறைகளைச் சேர்த்து கவனித்துக் கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. அதே போல ஒருசில அமைச்சர்களின் செயல்பாடுகளும் கட்சித் தலைமைக்கும், பிரதமர் மோடிக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, நாளை மறுநாள் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, மத்திய அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெய்க்வாட், கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மத்திய பிரதேசத்தில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா, அசாம் மாநிலத்தில் இருந்து சர்பானந்தா சோனவால் உள்ளிட்டோர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.


மத்திய அமைச்சரவையில், ஜோதிராதித்யா சிந்தியா, சர்பானந்த சோனவால், நாராயன் ரானே, பசுபதி பராஸ், அனுபிரியா படேல், பங்கஜ் சவுத்ரி, ரிடா பகுகுணா ஜோஷி, ராம்ஷங்கர் கதேரியா, வருண், ஆர்சிபி சிங், லல்லன் சிங் உள்ளிட்ட 20 புது முகங்கள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவையில் இடமளிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.,வில், தம்பிதுரை, ரவீந்திரநாத்துக்கு, மத்திய அமைச்சரவையில் இடமளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி.,யுமான ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவையில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான காய்களை ஓ. பன்னீர்செல்வம் ஏற்கனவே நகர்த்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.



மேலும், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மேற்கண்ட மாநிலங்களில் உள்ள பா.ஜ.க., - எம்.பி.,க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன

No comments:

Post a Comment

Post Top Ad