பிரம்மாண்ட விளையாட்டு நகரம்; முதல்வர் ஸ்டாலின் ஜாக்பாட் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, July 28, 2021

பிரம்மாண்ட விளையாட்டு நகரம்; முதல்வர் ஸ்டாலின் ஜாக்பாட் அறிவிப்பு!

பிரம்மாண்ட விளையாட்டு நகரம்; முதல்வர் ஸ்டாலின் ஜாக்பாட் அறிவிப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (28.07.2021) தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உலகத் தரத்தில் பயிற்சி

இந்த கூட்டத்தில், ஒலிம்பிக், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழகத்தை சார்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், உலகத் தரத்திலான பயிற்சி வழங்கிடவும், விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். மேலும் புதியதாக நடைமுறைப்படுத்த வேண்டிய விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கிராமப்புற மாணவர்களுக்கு முக்கியத்துவம்

ஒவ்வொரு விளையாட்டிலும் திறமையும் ஆர்வமும் உள்ள கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு, உறைவிடம் மற்றும் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதுடன், உயர் செயல்திறன் மிக்க பயிற்சி அளித்துப் பன்னாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிவகைகள் குறித்து ஆய்வு செய்தார்.

விளையாட்டு நகரம் அமைத்தல்

உலகத் தரத்திலான பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் ஏற்படுத்துதல், சென்னையில் பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைத்து அனைத்து வகையான போட்டிகளுக்கும் உயர்தரப் பயிற்சி அளித்தல், தமிழ்நாட்டின் அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டினை முழுமையாகச் செயல்படுத்துவதோடு, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டையும் சேர்த்துக் கொள்ளுதல்,

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் அதிக அளவில் பங்குபெற்றுப் பதக்கங்கள் வென்று இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலம் என்பதைப் பறைசாற்றுகின்ற வகையில் முன்னணி விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad