தலிபான் அமைப்பினரின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, August 19, 2021

தலிபான் அமைப்பினரின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்!

தலிபான் அமைப்பினரின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்!

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

அதேசமயம், ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அதிபராக தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பராதர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைபற்றியுள்ளதால் அங்கிருந்து வெளியேற பலரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

தலிபான்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளை தெரிவிக்க பலரும் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களை பயன்படுத்தி வருகின்றனர். தலிபான் பயங்கரவாத அமைப்பினர் கூட சமூக வலைதளங்களில் கருத்துகளையும், புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்னரும் கூட அவர்களது தகவல்களை பரிமாற சமூக வலைதளக் கணக்குகளை அவர்கள் உபயோகித்து வந்தனர்.

இந்த நிலையில், தலிபான் அமைப்பினர், ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. “அமெரிக்க சட்டப்படி பயங்கரவாத அமைப்பாக தலிபான் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், எங்கள் நிறுவனத்தின் கொள்கைப்படி தலிபான்களின் கணக்குகளுக்கு தடை விதிக்கின்றோம். தலிபான்களுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குவதுடன், தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படும் கணக்குகளும் முடக்கப்படும்” என்று ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.



“ஆப்கான் வல்லுநர் குழு எங்களிடம் உள்ளது. அவர்கள் உள்ளூரில் பேசப்படும் டாரி மற்றும் பாஷ்டோ மொழி பேசுபவர்கள். உள்ளூர் சூழல் பற்றிய அறிவு கொண்டவர்கள். எனவே, பிரச்சினைகளை அடையாளம் கண்டு எச்சரிக்கை செய்ய எங்களுக்கு அவர்கள் உதவுவார்கள்” என்றும் ஃபேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு ஃபேஸ்புக்கின் அனைத்து நிறுவனங்களுக்கும் அதாவது இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனாலும், தலிபான்கள் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி வருவதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், பயன்பாட்டில் உள்ள கணக்குகள் தடை செய்யப்பட்ட குழுவோடு இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.



அதேசமயம், ஆட்சி அதிகாரத்தை கைபற்றிய பின்னர் தலிபான் செய்தித் தொடர்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு ட்விட்டர் மூலம் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து வன்முறை அமைப்புகள் மற்றும் வெறுக்கத்தக்க நடத்தைகளுக்கு எதிரான தங்களது கொள்கைகளை சுட்டிக்காட்டும் ட்விட்டர் நிறுவனம், “அதன் விதிகளின்படி, பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதம் அல்லது வன்முறையை ஊக்குவிக்கும் குழுக்களை ட்விட்டர் அனுமதிக்காது” என்று தெரிவித்துள்ளது. ஆனால், தலிபான்கள் தொடர்பாக தங்களுடைய கொள்கைகள் பற்றி இதுவரை யூடியூப் எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை என்றும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad