தமிழ்நாட்டுக்கான ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் இருந்து தற்போது 15 பேர் ராஜ்யசபாவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். முன்னதாக, அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் முகமது ஜான் உடல் நலக் குறைவு காரணமாக காலமாகிவிட்டார். ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அதிமுகவின் வைத்திலிங்கம், கே.பிமுனுசாமி ஆகியோர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றுவிட்டதால் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.
இதனால், மாநிலங்களவையில் தமிழகத்துக்கு மூன்று இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாநிலங்களவை தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
தமிழகத்தில் காலியாக இருக்கக்கூடிய இடங்களில் ராஜ்யசபா தேர்தலை உடனடியாக மொத்தமாகவோ அல்லது தனித்தனியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
தற்போதைய நிலவரப்படி, காலியாக இருக்கும் 3 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் அறிவிப்பு வெளியானால் இரண்டு இடங்களை திமுகவும் ஒரு இடத்தை அதிமுகவும் கைப்பற்றும் வாய்ப்பு இருக்கிறது. தனித்தனியாக அறிவிப்பு வெளியானால் மூன்றுமே திமுகவுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் ஒரு இடத்துக்கான மாநிலங்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலினை செப்டம்பர் 1ஆம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 3ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூன்று இடங்கள் கலியாகவுள்ள நிலையில், தற்போது ஒரு இடத்துக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து அந்த இடத்துக்கான இடைத்தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அதிமுக மாநிலங்களவை எம்.பி., முகமது ஜான் காலமானார். அவரது பதவிக்காலம் வருகிற 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment