ஷோக்கான சென்னைத் தமிழ்; மெர்சலாகும் மேட்டுக்குடி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, August 22, 2021

ஷோக்கான சென்னைத் தமிழ்; மெர்சலாகும் மேட்டுக்குடி

ஷோக்கான சென்னைத் தமிழ்; மெர்சலாகும் மேட்டுக்குடி

சென்னைத் தமிழைக் குறை கூறுபவர்கள் அதன் உச்சரிப்புத் திரிபுகளையும் கொச்சையையும் சுட்டிக்காட்டுவார்கள். வலிச்சிக்குனு, இஸ்துக்கினு, புட்ச்சிக்குனு, மெர்சலாயிட்டா(ன்) முதலான பல சொற்களை மூக்கைப் பிடித்துக்கொண்டே விசித்திரமான முறையில் சொல்லிக்காட்டுவார்கள்.

இந்தக் குறைகளைக் கூறுபவர்கள் வட்டார வழக்கின் அடிப்படை அம்சங்களில் ஒன்று அதன் உச்சரிப்புத் திரிபு என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். திரிபு என்பது எல்லா வழக்குகளுக்கும் பொதுவானது. சளி பிடித்திருக்கிறது என்பதைச் சளி பிடிச்சிக்கிடிச்சி, தடுமம் பிடிச்சிரிக்கி, சளி பிடிச்சிண்ட்ருக்கு என்றெல்லாம் சொல்வது வட்டார / சாதி வழக்காக அங்கீகாரம் பெறும் என்றால் ஜல்ப்பு (ஜலதோஷம்) புட்ச்சிக்கிச்சு என்று சென்னைவாசி சொல்வதை மட்டும் எப்படி இழி வழக்காக ஒதுக்க முடியும்?

கிளம்பிவிட்டார்கள் என்பதைக் கிளம்பிட்டாய்ங்க என்று சொல்வதில் ரசம் இருக்கிறது என்று கருதுபவர்கள் கெலம்பிட்டாங்க என்று சொல்வதில் மட்டும் ஏன் ரசக் குறைவைக் காண வேண்டும்? கஷ்டம் என்பதை கஸ்டம் என்று சென்னைத் தமிழர் சொல்லும்போது சிரிப்பவர்கள் சிவாஜி என்பதை ஜிவாஜி என்று நெல்லைத் தமிழர் சொல்லும்போதும் சிரிக்க வேண்டியதுதானே.

தமிழ் என்பதைத் தமில் என்று உச்சரிக்கும் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்தது ஒரு கோடியைத் தாண்டும். கழுதையைக் கய்தே என்று சென்னைத் தமிழர் சொல்கிறார் என்றால் களுத என்று சொல்லும் பிற வட்டாரத் தமிழரும் இருக்கிறார். இந்நிலையில் சென்னைத் தமிழின் கொச்சையை மட்டும் பிரத்யேகப் பரிகசிப்புக்கும் இழிவுக்கும் உள்ளாக்குவது என்ன நியாயம்?இதுபோலப் பல கேள்விகளை எழுப்பலாம். ஆனால் வேறுபாடுகள் சார்ந்து கட்சி கட்டிக்கொண்டு லாவணி பாடுவதால் மொழிக்கு எந்தப் பலனும் விளையப் போவதில்லை. எல்லா வட்டார வழக்குகளுக்கும், பல்வேறு வட்டாரங்களில் இருக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் பொதுவான சில பிரச்சினைகள் சென்னைவாசிகளுக்கும் சென்னைத் தமிழ் வழக்கிற்கும் இருக்கத்தான் செய்யும். இந்தப் பிரச்சினைகளை மட்டும் வைத்துக்கொண்டு சென்னைத் தமிழை இழி வழக்காகக் காண முடியாது என்பதை உணர வேண்டும்.

செந்தமிழின் தாக்கம்

பிற மொழிகளின் தாக்கத்தைப் போலவே தமிழில் செந்தமிழின் தாக்கமும் இருக்கிறது. சென்னைத் தமிழில் வழங்கிவரும் குந்து என்னும் சொல்லைக் கொச்சை வழக்காகக் கருதிப் பலரும் அதைத் தவிர்த்துவிட்டு உட்காருதல் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் குந்துதல் என்பது உட்காருதல், அமர்தல் என்பதைப் போலவே முறைசார் தமிழ்ச் சொல்தான். குந்தித் தின்றால் குன்றும் மாளும் என்னும் பழமொழியிலிருந்து இதை அறியலாம்.

சென்னைத் தமிழில் உள்ள துன்னு என்பதும் சிலருக்கு ஒவ்வாத சொல்தான். தின்னுதல் என்னும் சொல்லின் கொச்சை வடிவம் இது. சாப்பிடுதல் உட்கொள்ளுதல் என்பவற்றைப் போலவே தின்னுதல் என்பதும் முறைசார் தமிழில் உள்ள சொல்தான். குந்தித் தின்றால் குன்றும் மாளும் என்னும் பழமொழியில் உள்ள தின்றால் என்பதைக் கவனித்தால் இது புரியும். பாரதியின் தேடிச் சோறு நிதம் தின்று என்னும் பாடலில் உள்ள தின்று என்னும் சொல்லைக் கவனித்தாலும் புரியும். தீரத விளையாட்டுப் பிள்ளை என்னும் பாடலில் வரும் தின்னப் பழம் கொண்டு தருவான் என்னும் வரியிலும் இதைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னைத் தமிழில் வழங்கப்படும் சோறு, சோத்துக்கு என்னும் சொற்களையும் அநாகரிகமான கொச்சைச் சொற்களாகப் பலரும் கருதுகிறார்கள். பொது இடங்களில் சோறு என்று சொல்வதைப் பெருமளவில் தவிர்த்துவிட்டு சாதம் என்னும் வடமொழிச் சொல்லையோ அல்லது ரைஸ் என்னும் ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்துகிறாகள். செஞ்சோற்றுக் கடன், சோழநாடு சோறுடைத்து, வெறும் சோற்றுக்கா வந்ததிந்தப் பஞ்சம் என்பன போன்ற தொடர்களைக் கவனித்தால் சோறு என்பது முறைசார்ந்த தூய தமிழ்ச் சொல் என்பதை உணரலாம்.

அருகில் எனப் பொருள்படும் 'அண்டை' என்னும் வார்த்தை சென்னைப் பேச்சு வழக்கில்தான் இன்னமும் இருக்கிறது. உதாரணம்: வூட்டாண்ட, கடையாண்ட

சமூக மதிப்பும் மொழியின் மதிப்பும்

சமூக மதிப்பின் அடிப்படையிலும் சென்னைத் தமிழின் இடத்தை அணுகிப் பார்க்க வேண்டும். ஒரு மொழி அல்லது வட்டார வழக்கைப் பேசும் மக்களின் வாழ்நிலையே அந்த மொழியின் அந்தஸ்தைத் தீர்மானிக்கும் காரணியாகப் பெரிதும் அமைந்துவிடுகிறது. பொதுப்புத்தியின் இந்த அணுகுமுறையையே அறிவாளர்களில் சிலரும் கைக்கொள்வது வருந்தத்தக்கது. சென்னைத் தமிழைப் பேசும் பலரது வாழ்நிலையை, பொருளாதார வலிமையை, சமூக அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்டு சென்னைட் தமிழைப் பலரும் மதிப்பிடுகிறார்க்ள். அதாவது, அந்த மக்களை இழிவாகக் கருதுவதுபோலவே அந்த மொழியையும் இழிவாகக் கருதுகிறார்கள். இது அப்பட்டமான மேட்டுக்குடிப் பார்வை.

சென்னையில் வசித்த ஆங்கிலேயர்கள் திருவல்லிக்கேணி என்று சொல்ல முடியாமல் ட்ரிப்ளிக்கேன் என்றார்கள். பூவிருந்தவல்லியைப் பூனமல்லி என்றார்கள். கீழ்ப்பாக்கம், கில்ப்பாக், தரங்கம்பாடி ட்ராங்குபார், திருச்சி ட்ரிச்சி, தஞ்சாவூர் டாஞ்சூர் என்று பல விதமாகத் தமிழ்ப் பெயர்களைத் திரித்து உச்சரித்தார்கள். இன்று பச்சைத் தமிழர்கள் பலரும் ட்ரிப்பிளிகேன், ட்ரிச்சி, கில்பாக் என்றெல்லாம் சொல்வதைக் கேட்கிறோம். ஆளும் வர்க்கத்தினரின் கொச்சைக்கு மட்டும் எப்படிப்பட்ட அங்கீகாரம் கிடைக்கிறது என்பதற்கான உதாரணம் இது. ஆங்கிலேயர்களை அடுத்துத் தமிழகத்தை ஆட்சிசெய்த அனைவரும் பொதுத் தமிழ் என்று கூறப்படும் தமிழில் உரையாடினார்கள். மேடைகளில் முறையான இலக்கண சுத்தமான தமிழைப் பேசினார்கள். அவர்களில் ஒருவரேனும் வட்டார வழக்கில், குறிப்பாகச் சென்னைத் தமிழில் பேசியிருந்தால் சென்னைத் தமிழுக்கும் பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கும். மொழிக்கும் அம்மொழியைப் பேசுபவர்களின் சமூக அந்தஸ்துக்கும் இடையே உள்ள தொடர்பு அத்தகையது.
சென்னைத் தமிழில் சகஜமாகப் புழங்கிவரும் வசைச் சொற்களை வைத்து அதை இழிவாகப் பார்க்கும் போக்கும் உள்ளது. எல்லா மொழிகளிலும் எல்லா வட்டார வழக்குகளிலும் ‘கெட்ட’ வார்த்தைகள் உள்ளன. அந்தச் சொற்களை அந்த வட்டாரத்தைச் சேர்ந்த எல்லோரும் பயன்படுத்துவதில்லை. பயன்படுத்துபவர்களும் எல்லாச் சமயங்களிலும் பயன்படுத்துவதில்லை. இந்தச் சொற்களை வைத்து எந்த மொழியையும் வழக்கையும் யாரும் இழிவுபடுத்துவதில்லை. வக்காளி அல்லது ஒக்காளி என்ற பாலியல் சார் வசைச் சொல்லை ரசமான திரிபாகக் காண்பவர்கள் சென்னைத் தமிழின் வசைச் சொல்லுக்கு மட்டும் வேறு அளவுகோல்களைப் போடுகிறார்கள்.

மொழியின் தன்மைகள் இடம், தொழில், சாதி வரலாறு ஆகிய காரணங்களால் மாறுவது மிக இயல்பானது. வெகுமக்கள் பண்பாடு, பழக்க வழக்கங்கள், மொழிக் கூறுகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகள் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டியவை. இதில் உயர்வு, தாழ்வு காண்பது மேட்டிமைவாதம். அந்த மேட்டிமைத்தனத்தைக் கைவிட்டு, சென்னைத் தமிழை முறையாக அணுகு வதற்கான பார்வையை வளர்த்துக்கொள்வதே மொழியின் மீதான அக்கறையை வெளிப்படுத்தும்.

திரைப்படங்களின் ‘பங்களிப்பு’

சென்னைத் தமிழ் மற்ற வட்டாரத் தமிழ்களைப் போலவே திரைப்படங்களில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. ஆனால், அது பெரும்பாலும் பரிகாசத்துக்கு உள்ளாகும் அல்லது நகைச்சுவைக்காகப் பயன்படுத்தப்படும். பெரும்பாலும் நகைச்சுவைப் பாத்திரங்கள்தாம் சென்னைத் தமிழ் பேசும். அல்லது படத்தில் சென்னையின் அடித்தட்டு மக்களாக வரும் பாத்திரங்கள் பேசுவார்கள். இவர்கள் யாரும் கதாநாயகனாகவோ கதாநாயகியாகவோ இருக்க மாட்டார்கள். அவர்கள் பொதுத் தமிழ் பேசுவார்கள் அல்லது இதர வட்டார வழக்குகளைப் பேசுவார்கள். சென்னைத் தமிழ் என்பது நகைச்சுவை நடிகர்களுக்கும் உதிரிப் பாத்திரங்களுக்கும் ஒதுக்கப்பட்ட மொழி. சந்திரபாபு, சோ முதல் லூஸ் மோகன், சென்ராயன்வரை இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலா

No comments:

Post a Comment

Post Top Ad