ஏமாற்றிய ஆகஸ்ட் மாதம்; ஷாக் தகவல் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
இந்தியாவில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் ஆகும். இதன் தொடக்கம் ஓரிரு நாட்கள் மாறுபடலாம். எப்படியும் ஜூன் முதல் வாரத்தில் பருவமழை தொடங்கிவிடும். நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு
மையம் கணித்திருந்தது. அதேசமயம் இயல்பை விட சற்றே குறைவாக பருவமழை இருக்கும் என்று ஸ்கைமெட் வெதர் என்ற தனியார் வானிலை நிறுவனம் பதிவிட்டிருந்தது. இந்த சூழலில் ஜூலை மாதம் இயல்பை விட குறைவாக மழை பெய்திருப்பதாக தெரியவந்தது.
பருவமழை ஏமாற்றம்
இதையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை அதிக அளவில் பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கிடையில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது பாதியில் இயல்பான அளவு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
ஆனால் ஜூலையை போன்றே ஆகஸ்ட் மாதத்திலும்
மழைப்பொழிவு ஏமாற்றத்தை அளித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 28 வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 10 சதவீத அளவிற்கு பருவமழை பொய்த்துள்ளது.
எந்தெந்தப் பகுதிகளில்
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குநர் மிருத்யுஞ்சய் மோகபத்ரா கூறுகையில், ஜூன் மாதத்தில் 10 சதவீத அளவிற்கு மழைப்பொழிவு ஏமாற்றம் அளித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 26 சதவீதம் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது.
இந்த பற்றாக்குறை வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பதிவாகியுள்ளது. குறிப்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் நான்கு மண்டலங்களில் ஒன்றான வடமேற்கு இந்திய வானிலை ஆய்வகத்தின் கீழ்வரும் வட இந்திய நிலபரப்புகள் மற்றும் மலைப் பகுதிகளில் இயல்பை விட 13 சதவீதம் குறைவாக மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது.
No comments:
Post a Comment