அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கைது!
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதற்கு, துணைவேந்தர் நியமனமும் நடைபெற்றது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு, கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை எனக் கூறி, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க முடிவு செய்தது.
இதற்கு அதிமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது தொடர்பாக
அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து வருகின்றனர். திமுக அரசு காழ்புணர்ச்சியுடன் செயல்படுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், “அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. அம்மா உணவகம் செயல்படுவதே இதற்கு உதாரணம்” என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், சட்டப்பேரவை இன்று கூடியதும், 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத்தை (திருத்தம் மற்றும் நீக்கம்) உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். இதில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இம்மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தொடர்ந்து, அதிமுகவினர்
அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கலைவாணர் அரங்கத்துக்கு முன்பாக இருந்த சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திமுக அரசை கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் கைதை கண்டித்து மாநிலத்தில் ஆங்காங்கே அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களும் கைதாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment