இனிமேல் ’இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்’ - முதல்வரின் சிறப்பான அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இலங்கை தமிழர்கள் நல்வாழ்விற்கு விதி எண் 110ன் கீழ் பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற தருணங்களில் எல்லாம் இலங்கை தமிழர்களை காக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில்
இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகள் 231.54 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டித் தரப்படும். இதில் முதல்கட்டமாக 3,510 புதிய வீடுகள் கட்டுவதற்கு நடப்பு நிதியாண்டில் 108.81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நலத்திட்ட உதவிகள் அறிவிப்பு
முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதுதவிர ஆண்டுதோறும் இலங்கை தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பொறியியல் படிப்பு பயில்வதற்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்கு அனைத்து கல்வி கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும்.
கல்வி உதவித்தொகை
வேளாண்/ வேளாண் பொறியியல் பட்டப்படிப்பிலும் மதிப்பெண் அடிப்படையில் முதல் 5 மாணவர்களுக்கும், மேற்குறிப்பிட்ட கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்தார். பாலிடெக்னிக் படிக்கும் இலங்கை தமிழ் மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பிற்கு 12 ஆயிரம் ரூபாயும், இளநிலை தொழில்
சார்ந்த படிப்புகளுக்கு 20 ஆயிரம் ரூபாயாகவும் கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
பெயர் மாற்றம்
முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த சூழலில் இன்றைய சட்டமன்ற கூட்டத்தில் பேசிய திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்,
110 விதியின் கீழ் இலங்கை தமிழர்களின் நலனுக்காக முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர் அகதிகள் முகாம் இனிமேல் 'இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்’ என்று அழைக்கப்படும் என தெரிவித்தார். அதற்கான உத்தரவு அரசாணையாக பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல. அவர்கள் நமது தொப்பிள் கொடி உறவுகள். நாம் இருக்கிறோம் அவர்களுக்கு துணையாக என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment