தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் கெடுபிடி; ஆட்டம் காட்டும் கொரோனா!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய இரண்டாவது அலையானது மே 21ஆம் தேதி 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பதிவாகி மிகப்பெரிய உச்சம் தொட்டது. இதனால் கடும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தினசரி பாதிப்புகள் வேகமாக குறைந்து வந்தன. கடந்த ஜூலை 27ஆம் தேதி 1,767 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், நேற்று (ஆகஸ்ட் 27)
புதிதாக 1,542 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
கடைசியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவின்படி, வரும் செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை கோவிட்-19 நோய்ப்பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதில், திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளும், அனைத்து கல்லூரிகளும் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக
கட்டுப்பாடுகள்
முதல் அலையில் கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்திய நிலையில், இரண்டாவது அலையில் மாநில அரசுகளின் கைகளில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தற்போது மாவட்ட நிர்வாகங்களே தங்களது சூழலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நோய்த்தொற்று அதிகமாக காணப்படும் மாவட்டங்கள், கேரளாவை ஒட்டியுள்ள எல்லையோர மாவட்டங்கள் ஆகியவற்றில் வார இறுதி ஊரடங்கு, கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
அடுத்தகட்ட ஊரடங்கு
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பரவல் குறைந்திருந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ளன. நேற்றைய தினம் மட்டும் 17 மாவட்டங்களில் கோவிட்-19 பாதிப்புகள் சற்றே அதிகரித்துள்ளன. இதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற அச்சமும், கேள்வியும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரிக்கையில், தற்போதைய சூழலில் கொரோனா பரவலுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மீண்டும் ஒட்டுமொத்தமாக முடக்குவது சாமானியர்களுக்கு
மட்டுமல்ல. அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும். அதேசமயம் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், போதிய சரீர இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். மூன்றாவது அலையின் தாக்கத்தைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவுகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment