பள்ளிகள் திறப்பு: 6 முதல் 8 வரை மாணவர்களே ரெடியா?
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. வகுப்புகள் ஆன்லைன் வாயிலாகவும் அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமும் நடைபெற்றது.
இந்த நிலையில் கொரோனா முதல் அலை சற்று குறைந்த போது மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. பொதுத்த்தேர்வு நெருங்கும் நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்த காரணத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது மாவட்ட வாரியாக அவர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து தமிழக முதல்வரிடம் அறிக்கையாக அமைச்சர் தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து சூழ்நிலையை கருத்தில் கொண்டு
முதல்வர் முடிவெடுப்பார் என்றும் மாணவர்களை பள்ளிக்கு வரும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அக்டோபர் முதல் வாரத்திலிருந்து 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது அலை குறித்த அச்சம் போன பின்பே நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து அரசு ஆலோசிக்கும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment