அதிமுகவில் அடுத்த கன்னி வெடி; கலக்கத்தில் மாஜி அமைச்சர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

அதிமுகவில் அடுத்த கன்னி வெடி; கலக்கத்தில் மாஜி அமைச்சர்கள்!

அதிமுகவில் அடுத்த கன்னி வெடி; கலக்கத்தில் மாஜி அமைச்சர்கள்!

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல்முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. தங்களது தேர்தல் வாக்குறுதியின் படி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை தூசு தட்டும் வேலைகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அடுத்ததாக எஸ்.பி.வேலுமணி என ரெய்டுகளால் தமிழக அரசியல் பெரும் பரபரப்பிற்கு ஆளாகியது.
இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது. அடுத்ததாக மேலும் சில வழக்குகளை தூசு தட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் வருமான வரித்துறை கையில் சிக்கியுள்ள விஷயம், திமுக அரசுக்கு அல்வா சாப்பிடுவது போல் அமைந்துள்ளது.
அதாவது, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இந்தியர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதேசமயம் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள கால அவகாசமும் அளித்தார். இதற்கிடையில் செல்லாத நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று அனைத்து சில்லறை மதுபானக் கடைகளுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிவிட்டது.
அந்த உத்தரவை மீறி பல்வேறு டாஸ்மாக் கடைகளில் பழைய ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுவும் வாடிக்கையாளர்கள் மது வாங்க பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்ததாக கணக்கு காட்டி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், புரோக்கர்களுக்கு சுமார் 62 கோடி ரூபாய் அளவிற்கு மாற்றிக் கொடுத்திருப்பதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, கடலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான செல்லாத நோட்டுகள் வசூல் செய்யப்பட்டுள்ளன. இந்த விஷயம் அதிமுக மாஜிக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த, தற்போது வருமான வரித்துறை விசாரணையில் இறங்கியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள டாஸ்மாக் நிர்வாகம், இந்த விவகாரத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கியதாக விளக்கம் கொடுத்திருக்கிறது.
இந்த விளக்கத்தை வருமான வரித்துறை ஏற்கவில்லை. அதுமட்டுமன்றி செல்லாத நோட்டுகளை வசூலித்த அதிகாரிகள் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களில் தெரியவந்துள்ளதாம். இந்த விஷயம் அதிமுக இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்த போது நிகழ்ந்துள்ளது. அப்போது மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி.
அவருக்கு தெரியாமல் செல்லாத நோட்டுகள் டாஸ்மாக் கடைகள் மூலம் மாற்றப்பட்டிருக்குமா என்று கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக அதிகமான செல்லாத நோட்டுகள் மாற்றப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களாக திண்டுக்கல் சீனிவாசன், எம்.சி.சம்பத், தங்கமணி உள்ளிட்டோர் இருந்துள்ளனர். இதனால் விசாரணை இவர்கள் பக்கம் திரும்பக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மை உடன் விசாரித்து யார், யாருக்கு இந்த பணம் சென்றுள்ளது என கண்டுபிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிபிஐக்கு மாற்றினால் தான் உண்மையை கண்டறிய முடியும் என்று சிலர் வலியுறுத்துகின்றனர். எனவே அடுத்து ஒரு ரெய்டுக்கு திமுக அரசு தயாராகி வருகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த விஷயம் சம்பந்தப்பட்ட அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad