புதிய ஆளுநரிடம் அப்படி செய்ய முடியாது; திமுக அமைச்சரால் ஷாக் ஆன ஓபிஎஸ்!
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் கைதாகி சிறையிலுள்ள ஏழு பேர் விடுதலை குறித்து செய்தியாளர்களிடையே பேசிய தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்களின் பதிலைப் பார்க்கும்போது 'கழுவுற மீனிலே நழுவுற மீன்' என்ற பழமொழி தான் என் நினைவிற்கு வருகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எஸ். நளினி, முருகன், சாந்தன், ஏ.ஜி. பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி. ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யப் பரிந்துரைத்து 09-09-2018 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,
தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து, 07-01-2019 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அது ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 116 நாட்கள் கடந்துவிட்டன என்றும், இந்த ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் அவர்கள் இதுவரையில் எந்த முடிவையும் எடுக்காமல், அதை அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்து, அமைச்சரவையில் எடுத்த முடிவை இப்படி காலவரையின்றி ஓர் ஆளுநர் தன்னிடமே வைத்துக் கொள்வது, மக்களாட்சியினுடைய மாண்புக்கு விரோதமானது இல்லையா என்று வினவியிருக்கிறார்.
இது மட்டுமல்லாமல், 02-02-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் அவர்கள் உரையாற்ற ஆரம்பிக்கும்போது, ஏழு பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்காததை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்தப் பிரச்சனையில் அதிமுக போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், மேற்படி ஏழு பேரை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இந்தியக் குடியரசுத் தலைவருக்குத் தான் இருக்கிறது என்று தெரிவித்து, தமிழ்நாடு அரசின் பரிந்துரையை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் பரிந்துரைத்தார்கள். இதன் தொடர்ச்சியாக, ஏழு பேர் விடுதலை குறித்து தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment