'சமூகநீதி கொடி கம்பீரமாகப் பஞ்சாபில் பறக்கிறது': ஒரு கல்லில் இரண்டு மாங்காய்..!
''பா.ஜ.க.வினரின் கூப்பாட்டினையும் இந்த ‘ஊசி’யின்மூலம் வெடித்த பலூனாக்கி விட்டது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டது - மகிழ்ச்சிக்குரியது'' என்று கி. வீரமணி விமர்சித்துள்ளார்.
அதுகுறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் '' பஞ்சாப் மாநிலத்தில் சமூகநீதி (தந்தை பெரியார் பிறந்த நாள்) நாள் காலகட்டத்தில் மலர்ந்து, காயாகி, கனிந்துள்ளது. பஞ்சாபில் இன்னமும் ஜாதிய அடையாளங்களும், அதன் தாக்கங்களும் உண்டு.
சீக்கிய மதத்தினர் இங்குள்ள கிறித்துவ மதத்தில் எப்படி ஜாதி முறை என்பது
ஊடுருவி இன்னமும் ஆதிக்கம் செலுத்தும் வேதனையான நிலை உள்ளதோ, அதேபோல் பஞ்சாபியர்களிடமும் உண்டு, உயர்ஜாதி, பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.), தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.,) போன்ற பிரிவினரும் உண்டு
இந்நிலையில், அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், முதலமைச்சசர் கேப்டன் அமிரீந்தர்சிங் பதவி விலகிய நிலையில், புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
சமூகநீதி கொடி கம்பீரமாகப் பஞ்சாபில் பறக்கிறது என்பதற்கும், பெரியார் - அம்பேத்கர் - மங்குராம் போன்ற சமூகப் புரட்சியாளர்களின் லட்சியப் பயணங்கள் இன்றும் தொடருகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டு இது ஆகும்.
புதிய முதலமைச்சராகத் தேர்வாகியுள்ள சரண்ஜித்சிங் சன்னி துப்புரவுத் தொழிலாளராக களப் பணி செய்த அணியினைச் சார்ந்தவராவார். அவர் பொது வாழ்க்கை உள்ளாட்சி நிறுவனத் தேர்தலில் வென்று, பிறகு தொடர்ந்த
தொண்டினால், மாநில தொழில்நுட்பத் துறை அமைச்சராகிய அனுபவம் பெற்றவருமாவார்! சமூகநீதிக்கு இடம் தந்த காங்கிரஸ் தலைமையைப் பாராட்டுகிறோம்!
2007 ஆம் ஆண்டு முதல் முறையாக சம்கவுர் சாகிப் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சரண்ஜித் சிங் சன்னி. அதற்குமுன் - இந்த 58 வயதானவர் - பஞ்சாபின் கரன் நகராட்சித் தலைவராக இருமுறை பதவி வகித்தவர் ஆவார். 2012-2017 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதேதொகுதியில் (சம்கவுர் சாகிப் தொகுதி) இருந்து வெற்றி பெற்றார். 2015 இல் பஞ்சாப் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர்!
பஞ்சாபில் இப்படி ஒரு அமைதியான அரசியல் சமூகப் புரட்சி ஏற்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. பழுத்த நிர்வாக அனுபவம் கொண்ட இவரைக் கொச்சைப்படுத்த அம்மாநில பா.ஜ.க.வினர் ஏதோ ஆதாரமில்லாத பழைய செய்திகளை மீண்டும் உலாவவிட்டிருப்பது-உயர்ஜாதி ஆணவத்தின் வெளிப்பாடு அல்லாமல் வேறு என்ன?
தமிழ்நாடு சமூகநீதி மண்-இந்தப் புதிய மாற்றத்தை வரவேற்றுப் பாராட்டுவதோடு - அவரை வாழ்த்தி மகிழ்கிறது! சில உயர்ஜாதி ஏடுகளும், ஊடகங்களும் இவருக்கு எதிரான சில செய்திகளைப் பரப்பி தங்களது எரிச்சலுக்கு வடிகால் தேடுகின்றன!
இதன்மூலம் காங்கிரஸ் தலைமை அருமையான சாதனை புரிந்ததோடு, ‘‘நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தால், தலித் ஒருவரை முதல்வராக்குகிறோம்‘’ என்ற பா.ஜ.க.வினரின் கூப்பாட்டினையும் இந்த ‘ஊசி’யின்மூலம் வெடித்த பலூனாக்கி விட்டது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டது - மகிழ்ச்சிக்குரியது!'' என இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment