பத்திரிகையாளர் நல வாரியம் என்ன செய்ய வேண்டும்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

பத்திரிகையாளர் நல வாரியம் என்ன செய்ய வேண்டும்?

பத்திரிகையாளர் நல வாரியம் என்ன செய்ய வேண்டும்?

போலிப் பத்திரிகையாளர்கள் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் ஒரு வழியாக தமிழ்நாடு பத்திரிகை கவுன்சில் ஒன்றை மாநில அரசு அமைக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 28 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. இதற்கு அரசின் எதிர்வினை என்ன என்ற கேள்வி எழுந்தபோது, ஆணையின் முழு விவரம் கிடைத்த பிறகு முதலமைச்சருடன் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று செய்தி-விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறினார். நல்லதொரு எதிர்வினை போல, ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ அமைக்கப்படுவதாக இப்போது (செப்.1) சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் அமைக்கச் சொன்ன கவுன்சிலுக்கும், அரசு அமைக்கவுள்ள வாரியத்திற்கும் குறிப்பிடத்தக்கதொரு வேறுபாடு இருக்கிறது. பத்திரிகை எத்தனை படிகள் விற்பனையாகிறது என்ற எண்ணிக்கை அடிப்படையில் பத்திரிகையாளர்களைப் பாகுபடுத்துவதாக, 10,000 படிகளுக்குக் குறைவாகப் புழங்குகிற ஏடுகளில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கான அங்கீகாரத்தை மறுப்பதற்கு இட்டுச் செல்வதாக கவுன்சிலுக்கான ஆணை இருக்கிறது. வாரியமோ, சிறு பத்திரிகையாளர்களுக்கும் அங்கீகாரம், பாதுகாப்பு, சட்ட உரிமைகள் போன்றவற்றை உறுதிப்படுத்துவதாக வருகிறது.

ஊடகவியலாளர்களது மாநாடுகளில், அவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் தலைவர்கள் விடுக்கும் அறிக்கைகளில் இத்தகைய வாரியம் அமைப்பதற்கான வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. 2019 ஜூலையில் சட்டமன்றத்தில் இதே கோரிக்கை வந்தபோது, அன்றைய செய்தி-விளம்பரத் துறை அமைச்சர் ராஜு, வாரியம் அமைப்பது குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். அப்படியொரு குழு அமைக்கப்பட்டதா, அது தனது அறிக்கையை அளித்ததா, அளித்தது என்றால் அதில் கூறப்பட்டிருப்பது என்ன என எதுவும் தெரியாது. இன்று அந்தக் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது.

இளையோருக்குப் பயிற்சி

training
அமைச்சர் சாமிநாதனின் அறிவிப்பில் மிக முக்கியமானது, இளம் பத்திரிகையாளர்கள் தங்களது மொழியாற்றல் உள்ளிட்ட தொழில்சார் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான சிறப்புப் பயிற்சிகள் பெறுவதற்கு நிதியுதவி செய்யப்படும் என்பதாகும். புகழ்பெற்ற ஊடகவியல் கல்வி நிறுவனங்களான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏஷியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜர்னலிசம் போன்றவற்றில் அந்தப் பயிற்சி அளிக்கப்படும். உலக சமுதாயத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப, செய்திகளையும் கருத்துகளையும் வழங்குகிற ஊடகப் பணியில் ஈடுபட்டிருக்கிறவர்கள் அதற்கான புத்தாக்கத் திறன்களில் பின்தங்கிவிடாமல் இருப்பது இன்றைய ஒரு முக்கியத் தேவை.

தலைவர்கள், அறிவியலாளர்கள், தொழிலதிபர்கள், நட்சத்திரங்கள் போன்றோரது செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றைக் காணலாம். அதிகாரப்பூர்வ சந்திப்பு முடிந்த பிறகு, மூத்த பத்திரிகையாளர்களைச் சுற்றி – குறிப்பாக பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைச் சுற்றி – அதிகாரப்பூர்வமற்ற செய்தியாளர் சந்திப்புகள் நடக்கும். அவர்கள் கூறுகிற விளக்கங்களைக் கேட்டு இளையவர்கள் தங்கள் செய்திகளை எழுதுவார்கள். தாங்கள் நேரடியாகக் கேட்டதைக்கொண்டே செய்தியாக்குகிறவர்கள் ஓரளவுக்குத்தான் இருப்பார்கள். அந்த மூத்தவர்கள் மறைக்காமல் பேட்டியைப் பகிர்வார்கள் என்றாலும், தங்கள் கண்ணோட்டத்திலேயே சொல்வார்கள் என்ற வாய்ப்பும் உண்டு.

தகவலைத் தகவலாகச் சொல்கிற உரிமையைப் போலவே, அதைத் தனது கண்ணோட்டத்தில் சொல்கிற உரிமையும் ஊடகவியலாளருக்கு உண்டு. அவ்வகையில், இளம் பத்திரிகையாளர்கள் தங்கள் மொழியறிவு, தகவலறிவு போன்றவற்றுடன், சுயமான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொண்டாக வேண்டும். இதற்குப் பயிற்சியளிக்கிற ஏற்பாடுகளை ஊடகவியலாளர் சங்கங்கள் மேற்கொள்ளலாம் என்று அவ்வப்போது பேசப்பட்டு, தொடக்க முயற்சிகள் சிறு அளவில் மேற்கொள்ளப்பட்டன என்றாலும் பெரிய அளவுக்குச் செயல்வடிவம் பெற்றதில்லை. தமிழக அரசு அமைக்கப்போகும் வாரியம் அந்தச் செயல்வடிவத்தை உருவாக்குவது ஆக்கப்பூர்வமானது.

பத்திரிகையாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் இந்த வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும். பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகை 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது போல, முன்களப் பணியாளர்களாகப் பத்திரிகையாளர்களை அனுப்பிவைத்த குடும்பங்களுக்கு இது புதுத்தெம்பளிக்கும்.

பண்பாட்டுத் தளத்தில் நல்ல தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய அடுத்தடுத்த அறிவிப்புகள் இந்த அரசிடமிருந்து வருகின்றன. மூத்த இலக்கியவாதிகளைக் கவுரவிப்பது உள்ளிட்டவை அத்தகையதுதான். இதையெல்லாம் செய்தியாக்கி மக்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிற ஊடகவியலாளர்களையும் கவுரவிக்கும் வகையில், கலைஞர் எழுதுகோல் விருது, ரூ.5 லட்சம் தொகையுடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உறுப்பினர்கள் யார் யார்?

press meet
ஊடகவியலாளர் அமைப்புகளால் இன்று வரவேற்கப்படுகிற இந்தத் திட்டங்கள் என்றென்றும் வாழ்த்துக்குரியதாக அமைய வேண்டும். அதற்குச் செய்ய வேண்டியது என்ன? வாரியத்திற்கு, அரசுக்கு வெளியேயிருந்து நியமிக்கப்படுகிற உறுப்பினர்கள் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக, ஆகப் பெருமளவுக்கு எல்லோராலும் ஏற்கத்தக்கவர்களாக, அரசியல் சார்புக்காக நியமிக்கப்பட்டவர்களல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக இருத்தல் வேண்டும். யாரை நியமித்தாலும் சர்ச்சை கிளப்புவதற்கென்றே சிலர் கிளம்புவார்கள்தான். ஆயினும் இந்த முதல் தேர்வில் அரசு அதிக மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும்.

முதலிலேயே குறிப்பிட்டது போல, பெரும் நிறுவனங்களாகிவிட்ட ஊடகங்கள் முதல், சிறு அளவில் சுற்றிவரும் பத்திரிகைகள் வரையில் பணியாற்றுவோர் வாரியத்தின் நன்மைகளைப் பெறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். நீதிமன்றம் நிர்ணயித்த அளவுகோல் பற்றிக் கருத்துக் கூறியபோது, சிற்றிதழ் எனப்படும் ஏடுகள் சமூக அக்கறையோடு வருகின்றன, அத்தகையவர்களுக்கு கருத்தியல் துணையாகவும் இருக்கின்றன என்பதால், அவற்றில் பணியாற்றுகிறவர்களைப் புறக்கணித்துவிடக் கூடாது என்று கூறியது நினைவுக்கு வருகிறது. வாரியம் அவ்வாறு, உரியவர்கள் அனைவரையும் அரவணைக்கிற பொறுப்பை ஏற்க வேண்டும். குறிப்பாக, ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களாகப் பெரிய நகரங்கள் அல்லாத ஊர்களில் உடனடி ஒப்பந்தப்படி பணியாற்றுகிற பலருக்கு, நிர்வாகங்களிடமிருந்து சட்டப்பூர்வ அங்கீகாரமோ உரிய சட்டப்பூர்வ ஏற்பாடுகளோ கிடைப்பதில்லை. அவர்களுக்கு நம்பிக்கையளிக்கிற இடமாக வாரியம் கட்டப்பட வேண்டும்.

உண்மையிலேயே ஊடகவியலாளர்கள்தானா அல்லது அந்தப் பெயரால் ஆதாயமடைகிறவர்களா என்பதை உறுதிப்படுத்துவது எப்படி? இதில் ஊடகவியலாளர் சங்கங்கள் சிறப்பாகப் பங்களிக்க முடியும். ஆகவே அணுகுமுறைகளை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் அந்தச் சங்கங்களின் கருத்துகளைப் பெறுவது வாரியத்திற்கு வலுச் சேர்க்கும். இதன் இன்னொரு பக்கமாக, வாரிய உறுப்பினர்கள் அனைவருமே, நீதிமன்றம் சொன்ன கவுன்சிலின் பார்வைக்கு உரியவர்களாக்கப்பட வேண்டும்.

கூடுதல் பொறுப்புகள்
media 4

ஆட்சிகள் மாறினாலும், சிலருக்கு அதிகார மட்டத்தில் இருப்போருடனான தொடர்பும் செல்வாக்கும் மாறுவதில்லை. அதைப் பயன்படுத்தி வேண்டியதைச் சாதித்துக்கொள்கிறவர்கள் உண்டு, அத்தகையவர்களில் பிற ஊடகவியலாளர்களுக்காகத் தங்களது தொடர்பையும் செல்வாக்கையும் பயன்படுத்துகிறவர்களும் உண்டு. விளம்பரங்களைப் பெறுவதற்கென்றே பெயருக்கு ஒரு இதழைப் பதிவு செய்து பொதுமக்கள் கைகளுக்கே வராதபடிக்கு சில படிகள் மட்டுமே அச்சிடுகிறவர்கள் பற்றிய பேச்சுகளும் உண்டு. இனி இதையெல்லாம்கூடக் கவனிக்கிற இடமாகவும் வாரியத்தை அரசு கட்டமைக்கலாம்.

வணிக மைதானத்தில் நன்கு காலூன்றிய பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த, பெரிய அளவில் ஊதியம், வாகன வசதிகள் என்றெல்லாம் பெறுகிறவர்களுக்கும் வாரியத்தின் பலன்கள் கிடைக்க வேண்டுமா? மற்ற பல நல வாரியங்கள், நிறுவனம் சாராத எளிய பிரிவினருக்காக என்றிருக்கும்போது, பத்திரிகையாளர் வாரியத்தைச் சிறிய நிறுவனங்களின் ஊழியர்களுக்காக மட்டும் என உருவாக்கலாமே என்ற கருத்து பகிரப்படுகிறது. பொதுவான நியாய உளவியல்படி பார்த்தால், பெருநிறுவனங்களைச் சார்ந்தவர்கள் வாரியத்தின் இதர நிதி உதவிகளைக் கோர மாட்டார்கள். அப்படியே சிலர் கோரினாலும், அதை வாரியம் தனது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.

மேலும், பத்திரிகையாளர்களின் பிரச்சினைகள் பணம் தொடர்பானவையாக மட்டுமே இருக்க வேண்டுமென்பதில்லையே? அரசியல் அணிவரிசைகளிலிருந்து வருகிற கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான கெடுபிடிகள் முதல், நிர்வாகங்களிடமிருந்தே வருகிற திடீர் வேலை நீக்கம் உள்ளிட்ட வாழ்க்கைச் சவால்கள் வரையில் பன்முகப் பிரச்சினைகள் இருக்கின்றன. வாரியம் அவற்றிலும் தலையிடக்கூடியதாக, தீர்வுக்கு வழிசெய்வதாக அதன் செயல்முறைகள் வடிவமைக்கப்பட்டாக வேண்டும். அப்போது பத்திரிகையாளர் நல வாரியம், அடிப்படையில் பத்திரிகையியல் நல வாரியமாகவும் பரிணமிக்கும். சொல்லப்போனால், நிறுவன வளாகங்களுக்கு வெளியே அனைத்து ஊடகங்களைச் சேர்ந்தோரையும் இணைத்துச் செயல்படும் சங்கங்களே இருக்கின்றன, உறுப்பினர்களுக்கு நிர்வாக நடவடிக்கைகளால் ஏற்படும் சிக்கல்களில் அந்தச் சங்கங்கள் தலையிட முடிவதில்லை. இந்த இடத்தில் வாரியம் சரியாகப் பொருந்த முடியும், பொருத்திக்கொள்ள வேண்டும்.

இறுதியாகச் சொல்வதற்கு ஒன்று – ஊடகம் இன்று மிகப் பெரிய பரிமாணங்களை அடைந்திருக்கிறது. சந்தையில் முந்தி நிற்கிற நிறுவனங்களாக மட்டுமல்லாமல், இணையதள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிற சிறிய ஊடக முயற்சிகள் இன்று பெரிய கவனத்தைப் பெறுகின்றன. பெருநிறுவனங்களால் வெளியேற்றப்பட்டவர்கள் திகைத்துத் தேங்கிவிடாமல், தன்முனைப்போடு காணொளி விவாதங்கள், உரையாடல்கள் என அடையாளம் பதித்துவருகிறார்கள். அவர்களையும், இதர பல்வேறு சிறு ஊடக இல்லங்களைச் சார்ந்தோரையும் வரவேற்கிற இடத்தில் வாரியம் இருப்பதே ஊடக வளர்ச்சியின் புத்தாக்கப் பரிமாணத்தோடு இணைந்திருக்கச் செய்யும்.

அமைக்கப்படும் வாரியம் முறையாகக் கூடுவது, ஊடகவியலாளர்களது பல்வேறு பிரச்சினைகளை அது ஆய்வு செய்வது, அதன் பரிந்துரைகளை அரசு ஏற்றுச் செயல்படுத்துவது ஆகியவை தொடர்ச்சியாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்போது நல வாரியம் நல்ல வாரியமாக முத்திரை பதிக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad