விடியா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: அதிமுக சாடல்!
எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரைத் தொடர்ந்து யார் சிக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கியுள்ளார். சென்னை, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட இவருக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உறவினர்கள், நெருக்காமானவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்பது உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை என்று இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம், அது வளர்ச்சிக்கு அறிகுறி. நாம் மக்கள், வன விலங்குகள் அல்ல. இது நாடு, காடு அல்ல. காட்டு முறையைக் கையாண்டால் அதற்குப் பெயர் ஜனநாயகமாகாது. இது பாசிச முறை அது" என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். போறிஞர் அண்ணா அவர்களின் இந்தக் கூற்றுக்கு முற்றிலும் முரணான வகையில், ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கைகளில் 'விடியா திமுக, அரசு' ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சாத்தியப்படாத வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, அதை நிறைவேற்ற
முடியாமல் மக்களின் வெறுப்பினை சம்பாதித்திருக்கின்ற நிலையில், அதனை மூடி மறைத்து, உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறது.
இதன் வெளிப்பாடாக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளருமான கே.சி. வீரமணி வீட்டிலும், அவரது உறவினர்கள், நண்பர்கள் என்று நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தவர்கள் என்று சுமார் 28 இடங்களில், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, 'ஸ்டாலின் போலீசார்' சோதனை என்ற பெயரில் இன்று ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.
இது உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment