வண்டியை நிறுத்துங்க சார்: இறங்கிச் சென்ற இறையன்பு, கோரிக்கை வைத்த மக்கள்!
தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, பொதுப்பணித் துறையின் அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் நேற்று (செப்டம்பர் 24) புழல் ஏரி, பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய மூன்று குடிநீர் ஆதாரங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், நீர்நிலைகளில் உள்ள கதவணைகள் மற்றும் கரைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, பருவ மழைக்கு முன்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் வெள்ள தடுப்பு தளவாடங்களின் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். நீர்நிலைகளில் உள்ள கதவணைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும், அதன் இயக்கம் சரியாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனர்.
இந்த சூழலில் இறையன்பு சென்ற காரை பூண்டி கிராம மக்கள் வழிமறித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே காரிலிருந்து இறங்கிச் சென்று மக்களிடம் இறையன்பு பேசினார். அப்போது அவரது காலில் விழ முற்பட்ட பெண்ணை, தடுத்து அவர்களது கோரிக்கை என்ன என்று கேட்டார்.
சென்னை பூண்டி கிராமத்திலுள்ள பொது மயானப்பாதை பல வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தக் கிராம மக்கள் இறந்த உடல்களை 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றி மயானத்திற்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது. இதை மக்கள் அவரிடம் கூற நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
No comments:
Post a Comment