பத்திரிகையாளர்களை தரக்குறைவாக மீண்டும் பேசிய ஹெச்.ராஜா: ஊடகங்கள் புறக்கணிக்குமா?
நல்லது செய்து பெயர் வாங்கியவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றால், சர்ச்சையாக பேசி தனது பெயரை ஊர் தெரிய வைப்பவர்கள் சிலர். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சிலரில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும் ஒருவர். சர்ச்சைகளின் நாயகனாக வலம் வரும் ஹெச்.ராஜாவின் எந்த ஒரு
கருத்துக்கும், எதிர்வினையாற்றுபவர்களை தேச விரோதிகள் என்று சொல்லி தட்டிவிடும் அவர், ஊடகங்களை பலமுறை தரக்குறைவாக சாடியுள்ளார்.
அந்த வகையில், பாலியல் தொழிலாளர்களைக் குறிக்கும் கொச்சையான ஆங்கிலச் சொல்லோடு (Prostitute) பத்திரிகையாளர்களை (Press) இணைவைத்துப் பேசுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். பத்திரிகையாளர்கள் நெருக்கடியான கேள்விகளை கேட்கும்போதெல்லாம் இவ்வாறு அவர்களை வசை பாடுவது அவரது பழக்கமாக உள்ளது, உயர் நீதிமன்றத்தையே **** எனக் கேட்டு கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் தப்பியவருக்கு இது சாதாரண விஷயமாக கூட தெரிந்திருக்கலாம்.
இந்த நிலையில், பத்திரிகையாளர்களை மீண்டும் ஹெச்.ராஜா தரக்குறைவாக பேசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மோகன் என்பவர் இயக்கிய 'ருத்ரதாண்டவம்' படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த
போது, திடீரென ஆவேசமாகி விட்டார். “இந்து இல்லாவிட்டால் தமிழ் எங்கிருந்து வந்தது? இந்து இல்லாவிட்டால் தமிழ் ஏது?” என கேள்வி எழுப்பிய அவர், “இதுக்குதான் சொல்றேன், you all media people Presstitues” என்றார்.
இதையடுத்து, ஹெச்.ராஜா பேசியதற்கு வழக்கம் போல் மீண்டும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால், அவரை புறக்கணிக்கும் முடிவை ஊடகங்கள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன் வைக்கப்படுகின்றன. அவர் மட்டுமல்லாமல் இதுபோன்று பத்திரிகையாளர்களை தவறாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment