தேர்தல் ஆணையத்தை அணுகும் சுகாதாரத் துறை: இதுதான் காரணம்!
விடுதலை போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 104ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் ராமசாமி படையாட்சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். மக்களின் கோரிக்கையை ஏற்று இராமசாமி படையாட்சியாரின் சிலையை நிறுவியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
சமுதாய வளர்ச்சிக்கு திமுக
என்றும் உறுதியாக உள்ளது . மிகவும் பின் தங்கிய சமூக மக்களின் உணர்வுகளை மதிக்கும் இயக்கம் திமுக. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். கூட்டணியை மதிக்கும் கட்சி திமுக. பா.ம.க அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது அவர்களது விருப்பம்” என கூறினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீட் தேர்வு எழுதிய 1,10,971 மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 364 மாணவர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. 333 மனநல ஆலோசகர் மருத்துவர்கள் மூலம் 38 மாவட்டங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆலோசனை நடைபெற உள்ளது. 5000 மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
மனநல ஆலோசனை மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த முயற்சி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. கடந்த மாதம் 5ஆம் தேதி மக்களை தேடி மருத்துவம் நிகழ்சியை முதல்வர் துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் நேற்று
மட்டும் 32,743 பயனாளிகளுக்கு மருந்துகளும் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 4,93,544 பேர் பயன் பெற்றுள்ளனர். 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதி இருப்பதால் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதவுள்ளோம்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
“நீட் விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். நீட் மசோதவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும். பள்ளிகளில் 83 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது உண்மை. அவர்கள் சிகிச்சையில் உள்ளனர்” எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
No comments:
Post a Comment