தமிழக அரசு செய்வது சட்ட விரோதம்; தங்க பிஸ்கட் திட்டத்தை உடனே நிறுத்துங்க - நாராயணன் திருப்பதி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 30, 2021

தமிழக அரசு செய்வது சட்ட விரோதம்; தங்க பிஸ்கட் திட்டத்தை உடனே நிறுத்துங்க - நாராயணன் திருப்பதி!

தமிழக அரசு செய்வது சட்ட விரோதம்; தங்க பிஸ்கட் திட்டத்தை உடனே நிறுத்துங்க - நாராயணன் திருப்பதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நகைகளை மீட்டு, அதனை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றும் திட்டத்தை மாநில அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் வகையில் வைப்பு நிதியாக வைத்து, கிடைக்கும் வட்டித் தொகையில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இது சட்டவிரோதமானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது. அரசியலமைப்பு விதி 25 மற்றும் 26 க்கு முற்றிலும் எதிரானது. தங்களுடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் அடிப்படையில் தான் பக்தர்கள் குறிப்பிட்ட கோயில்களில் உள்ள தெய்வத்திற்கு தங்கத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர். கோயில்களின் சொத்துகளுக்கு சொந்தக்காரர் அந்தந்த கோவில்களில் உள்ள தெய்வம் தான் என உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவாக கூறியுள்ளது

இந்நிலையில் பல கோவில்களில் உள்ள சொத்துகளை உருக்கி ஒரே பத்திரமாக மாற்றி கோயில்களுக்கு இந்து அறநிலையத்துறை தான் சொந்தக்காரர் என்பது போல், பக்தர்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் திமுக அரசு செயல்படுவது சட்டவிரோதம் மட்டுமல்ல, நம்பிக்கை துரோகமும் கூட. பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற செலுத்திய காணிக்கைகள், குறிப்பிட்ட கோயில்களின் முன்னேற்றத்திற்கு, நிர்வாகத்திற்கு பயன்பெற வேண்டுமே தவிர, அந்த வளத்தை பயன்படுத்தி மற்ற கோயில்களுக்கு செலவு செய்வதற்கு அரசுக்கு அல்லது இந்து அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.

உண்மையிலேயே இந்த அரசுக்கு கோயில்களின் முன்னேற்றத்தில் அக்கறை இருந்தால், அரசின் வருமானத்தை பெருக்கி, அதைக்கொண்டு செலவிட வேண்டும். மாறாக ஒரு கோயிலின் சொத்தை ஈடாக வைத்து வேறு கோயில்களுக்கு செலவிடுவது முறையான செயல் அல்ல. மேலும், அமைச்சர் சேகர் பாபு அவர்கள், திருப்பதி கோயிலில் இது போன்று செய்வதாக சொல்லியிருப்பது உண்மைக்கு புறம்பானது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த கோயில்களின் சொத்தின் மூலம் அல்லது அதன் வருமானத்தை கொண்டே அந்த கோயில்களுக்கு செலவிடப்படுகிறது என்பதே உண்மை. ஆகவே, சட்டத்திற்கு புறம்பான, மக்கள் நம்பிக்கைக்கு விரோதமான இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதோடு, இந்த அறமற்ற செயலை இந்து அறநிலையத்துறையின் மூலம் செய்ய முனையும் நடவடிக்கையை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad