பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டித் தேர்வு; தேர்வு வாரியத்திற்கு முக்கிய கோரிக்கை!
பாமக நிறுவனர்
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்ற ஆணைப்படி பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) விரிவுரையாளர்கள் 1060 பேரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு 27.11.2019 அன்று அறிவிக்கப்பட்டது. அத்தேர்வுகள் 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. கடந்த ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட
போட்டித் தேர்வுகளை வரும் அக்டோபர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வாரியம் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 2019-ஆம் ஆண்டு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு,
இரு ஆண்டுகளாகிவிட்ட சூழலில் அப்போது விண்ணப்பித்தவர்களை மட்டும் கொண்டு, போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டால், அது அந்தப் பணிக்கு கடந்த இரு ஆண்டுகளில் தகுதி பெற்றவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாக அமைந்து விடும். பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான அடிப்படைக் கல்வித் தகுதி, பொறியியல் சார்ந்த பாடங்களில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; பொறியியல் அல்லாத பாடங்களில்
முதல் வகுப்பு மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்று இருக்க வேண்டும் என்பதாகும்.
2019-ஆம் ஆண்டு போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இளநிலை/ முதுநிலை பொறியியல் பட்டமும், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், நவீன அலுவலக நடைமுறைகள் போன்ற பொறியியல் அல்லாத பாடங்களில் முதுநிலைப் பட்டமும் பெற்று விரிவுரையாளர் பணிக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் இப்போட்டித் தேர்வு நடத்தப்பட்டால், அதற்குப் பிறகு தகுதி பெற்ற ஒரு லட்சத்திற்கும் கூடுதலானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்.
No comments:
Post a Comment