தமிழகத்தின் வீர விளையாட்டு சிலம்பத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 19, 2021

தமிழகத்தின் வீர விளையாட்டு சிலம்பத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம்!

தமிழகத்தின் வீர விளையாட்டு சிலம்பத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம்!

சிலம்பம் என்பது தமிழர்களின் பிரத்யேக தற்காப்புக் கலை மற்றும் வீர விளையாட்டு ஆகும். பேச்சு வழக்கில் கம்பு சுற்றுதல் என்றும் அழைக்கப்படும் சிலம்ப விளையாட்டில், சிலம்பத் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் ஒருவர் தன்னை பாதுகாத்து கொள்ள முடியும்.


சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் போன்றன அடிப்படையாகும். சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொடுப்பதற்கக சிலம்பாட்டக் கழகங்கள் பல உள்ளன. ஒருகாலத்தில் ஆண்கள் மட்டுமே கற்றுக் கொண்ட சிலம்பம் சுற்றும் கலையை தற்காலத்தில் பெண்களும் கற்றுக் கொள்கின்றனர்.

சுமார் 5000 ஆண்டுகள் பழமையான வீர விளையாட்டாக அறியப்படும் தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், உலகறிய செய்யும் நோக்கத்திலும், மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில் சிலம்பம் விளையாட்டை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, சிலம்பம் விளையாட்டினை கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீரித்துள்ளது. மத்திய அரசின் விளையாட்டுத்துறையின் இந்த அங்கீகாரமானது, புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழான, விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல் என்ற கூறில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

மத்திய அரசின் அங்கீகாரம் தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் மெய்யநாதன், ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad