பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
கொரோனா காரணமாக மூடப்பட்ட தமிழக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க இயலாத சூழல் நிலவுதால் பாடத்திட்டங்களை 50 சதவீதம் வரை குறைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்படும்
என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக கலையரங்கில் தேசிய மரபுசார் விதை மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
அதில், கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் பாரம்பரியத்தின் அருமைகளை தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்படும். பாடத்திட்டத்தில் இயற்கை விவசாயம் தனி பாடமாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாரம்பரியம் மிகுந்த நமது மரபுசார் பாரம்பரிய அரிசிகளை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், 14 மாவட்டங்களில் 200 ஏக்கர் பரப்பளவில்
பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை அரசு மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன், பாண்டிச்சேரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. உழவர்களுக்கு பாரம்பரிய நெல் வகைகளை அமைச்சர் இலவசமாக வழங்கினார்.
No comments:
Post a Comment