இன்று 4வது மெகா தடுப்பூசி முகாம்; எந்தெந்த இடங்களில் தெரியுமா?
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மீண்டுமொரு மெகா தடுப்பூசி முகாமிற்கு தமிழக அரசு இன்று தயாராகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏராளமான உயிர்களை பலிவாங்கியது. வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்காக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து பெற்று தமிழக மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு நிர்ணயம் செய்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை விரைவுபடுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இன்று தடுப்பூசி முகாம்
முதலில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19ஆம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.41 லட்சம் பேருக்கும், 26ஆம் தேதி 23 ஆயிரம் இடங்களில் 24.85 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம்கள் அனைத்திலும் தமிழக அரசு நிர்ணயத்ததை விட அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இந்த சூழலில் நான்காம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட 20 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெறுகிறது.
இரவு 7 மணி வரை நடைபெறும்
சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி 25 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.7 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு நிறைவேற்றாததை 100 நாட்களில் திமுக செய்து இருக்கிறது!
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 1.42 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நடப்பு மாதம் 1.50 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 6 கோடியே 6 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டிருக்கிறோம். முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 68 சதவீதம் பேர் போட்டிருக்கின்றனர்.
இதனை அக்டோபர் மாதத்திற்குள் 70 சதவீத அளவிற்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசியை 20 சதவீதம் பேர் போட்டிருக்கின்றனர். உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள கருத்தின்படி, 70 சதவீதத்திற்கு மேல் தடுப்பூசி போட்டுக் கொண்டால் நாம் பாதுகாப்பான சமூகத்தில் இருக்கிறோம் என்று அர்த்தம். எனவே 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment