5 மணி நேரமாக கொட்டும் மழை; மீண்டும் சென்னையில் வெள்ளம்!
சென்னையில் 5 மணி நேரமாக பெய்யும் தொடர் மழையால் பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஒருசில சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. நவம்பர் மாதம் முழுவதும் பருவமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
அதேபோல் கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களிலும் கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்தது. டிசம்பர் மாதம் பெய்த மழை சற்று ஓய்வெடுத்ததால் குடியிருப்பகளை சூழ்ந்து நின்ற வெள்ளநீர் படிப்படியாக வடிய தொடங்கியது.
இந்நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அடுத்து வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி சில வாரங்கள் ஓய்வுக்குப் பின்னர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் 5 மணி நேரமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி, புரசைவாக்கம், வேப்பேரி, அடையாறு, பெருங்குடி, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.
இந்த திடீர் மழையால் பெரும்பாலான சாலைகளை மூழ்கடித்து தண்ணீர் ஓடுகிறது. மழையை பலரும் எதிர்பார்க்காததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த தொடர் மழையால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
முக்கியமாக சென்னை எம்ஆர்சி நகரில் 94 மிமீ மழை இதுவரை பெய்துள்ளது. மீனம்பாக்கத்தில் 50 மிமீ மழை வரை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 25 மிமீ மழை வரை பெய்துள்ளது. எழும்பூர், கிண்டி, சேத்துப்பட்டு, சென்ட்ரல், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விடாமல் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்த இந்த மழையானது மேக வெடிப்பின் காரணமாக இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment