‘விடைபெறுகிறேன்’…ஓய்வை அறிவித்தார் நியூசிலாந்து ‘உலகக் கோப்பை வின்னர்’: கடைசி போட்டி இதுதானாம்!
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக நியூசிலாந்து அணி ஆட்டக்காரர் தெரிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியின் மூலம், நியூசிலாந்து அணிக்கு அறிமுகமான அதிரடி ஆட்டக்காரர் ராஸ் டெய்லர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
இவருக்கு தற்போது 37 வயதாகிறது. உள்நாட்டில் இன்றுமுதல் துவங்கவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் டெஸ்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடர் முடிந்தவுடன் ஒருநாள், டி20-களில் ஓய்வை அறிவிக்கவுள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இவருக்கு 112ஆவது போட்டியாகும். இதற்குமுன் டேனியல் விக்டோரிதான், நியூசிலாந்துக்கு அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் (112) விளையாடிய வீரராக இருந்தார். அந்த சாதனையை டெய்லர் சமன் செய்யவுள்ளார். இந்தாண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக, இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி, நியூசிலாந்துக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.
ஓய்வு குறித்துப் பேசியுள்ள அவர், “மறக்க முடியாத பயணம். நீண்ட காலமாக அணிக்காக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. பல நண்பர்கள் கிடைத்தார்கள். பல நல்ல நினைவுகளும் கிடைத்துள்ளது. இருப்பினும், அனைத்திற்கும் முடிவு என்பது நிச்சயம் இருக்கும். நானும், எனது கிரிக்கெட் பயணத்திற்கும்தான். இக்கட்டான நிலையிலும்கூட, என்னுடன் நின்ற அனைவருக்கும் நன்றிகள்” எனத் தெரிவித்தார்.
மூன்றுவிதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் டெய்லர்தான். மொத்தம் சேர்த்து 445 போட்டிகளில் 40 சதங்கள் உட்பட 18,074 ரன்களை குவித்துள்ளார். நியூசிலாந்து வீரர்களில் இதுதான் மிகவும் அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment