தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் எடுக்கும் முக்கிய முடிவு!
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மேலும் புதிய வகை ஒமைக்ரான் வைரஸும் வேகமாக பரவி வருகிறது. நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க, இன்று இரவு முதல் நாளை காலை வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஏற்கனவே அமல்படுத்த கொரோனா ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே அடுத்தகட்ட கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 31) காலை சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. தினசரி கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் நபர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்துவது பற்றி சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படலாம்.
மேலும் புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, அனைவரும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்தல், முகக்கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகளை பொறுத்தவரை மாணவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்பிறகு தினசரி வகுப்புகள் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்படக்கூடும். ஏனெனில் ஒமைக்ரான் அதிவேகமாக பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் நலனிற்கு முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. எனவே மீண்டும் சுழற்சி முறை வகுப்புகள் அல்லது வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏதேனும் உத்தரவுகள் வெளியாகலாம்.
சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியிருந்தது. எனவே இதுபற்றியும் ஆலோசித்து புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்க உத்தரவிடப்படலாம். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment