இன்று முதல் இரவுநேர ஊரடங்கு; கெடுபிடியை ஆரம்பிக்கும் மாநில அரசு!
புத்தாண்டு கொண்டாட்டங்களால் கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மிக முக்கியமானது கேரளா. மகாராஷ்டிராவிற்கு அடுத்த இடத்தில் 50 லட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இரண்டாவது அலை முடிந்ததை அடுத்து பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்தன. தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகமெடுத்து வருவதால் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் புத்தாண்டு பிறக்கப் போகிறது.
இதையொட்டி பொதுமக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். இதனால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சூழலில் புத்தாண்டு கால தடுப்பு நடவடிக்கையாக இன்று (நவம்பர் 30) இரவு முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
இந்த நேரத்தில் கடற்கரை, ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை மிகவும் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும். வரும் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணிக்கு பின்னர் எந்தவொரு கொண்டாட்டத்திற்கும் அனுமதி இல்லை.
மேற்குறிப்பிட்ட நாட்களில் கேரளாவில் உள்ள பார்கள், ஓட்டல்கள், கிளப்கள், உணவகங்கள் ஆகியவற்றில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நேற்று புதிதாக 2,846 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 52,30,249 பேராக அதிகரித்துள்ளது.
211 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 47,277ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 2,576 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 20,456 ஆக சரிந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 69,852 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 526 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதையடுத்து திருவனந்தபுரம் (507), கோழிக்கோடு (348) ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன. ஒமைக்ரான் பாதிப்பை இந்தியாவில் 961 பேருக்கு பரவியுள்ளது. கேரள மாநிலத்தில் இன்று பிற்பகல் நிலவரப்படி 65 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment